மேலும்

புலிகளின் பெயரில் படைஅதிகாரிகளை படுகொலை செய்த சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு

Algama, Seneviratneவிடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி, படைஅதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகளை சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறை படுகொலை செய்ததாக, குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக சத்ஹண்ட என்ற சிங்கள வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களில், முன்னாள் படை அதிகாரியும், பின்னர் அரசியலில் ஈடுபட்டவருமான மேஜர் ஜெனரல் லக்கி அல்கம, மற்றும் சிறப்பு அதிரடிப்படையின்  கட்டளை அதிகாரி மூத்த கண்காணிப்பாளர் ஊபுல் செனிவிரத்ன ஆகியோரும் உள்ளடங்கியுள்ளனர்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போனமை தொடர்பாக, நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே இந்த விபரங்களும் தெரியவந்திருக்கின்றன.

நீதிமன்ற உத்தரவையடுத்து சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களிலேயே இதுபற்றிய விபரங்களும் அடங்கியிருந்தன.

அந்தக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் உயர்மட்டங்களுடன் இருந்த தொடர்புகளைப் பயன்படுத்தியே, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு இந்தப் படுகொலைகளில் ஈடுபட்டுள்ளது.

1999 டிசெம்பர் 18ஆம் நாள், ஜாஎலவில் ஐதேகவின் பேரணியில் மேஜர் ஜெனரல் லக்கி அல்கமவின் மீதான தற்கொலைத் தாக்குதலை சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரி்வே திட்டமிட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய, அப்போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த பிரதி காவல்துறை மா அதிபர் ஹேமச்சந்திர இதனை உறுதிப்படுத்தும் அறிக்கையை  தேசிய பாதுகாப்புச் சகைக் கூட்டத்தில் சமர்ப்பித்திருந்தார்.

அந்தச் சம்பவத்துக்கு அப்போது இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த- இப்போது ஓய்வு பெற்றுள்ள மேஜர் ஜெனரல் ஒருவர் மீது அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

தற்கொலைக் குண்டுதாரிகளைக் கண்காணித்த விடுதலைப் புலிகளின் உயர்மட்டப் பிரமுகர் ஒருவருடன், இந்த மேஜர் ஜெனரல் தொடர்புகளை வைத்திருந்தார்.

அவரைக் கைது செய்வதற்கு பிரதி காவல்துறை மா அதிபர் ஹேமச்சந்திர, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோரிய போது, அது இராணுவத்தினரை நிலைகுலைய வைக்கும் என்று நிராகரிக்கப்பட்டது.

அப்போது சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அரசாங்கம் பதவியில் இருந்தது.

தனிப்பட்ட பகைமை காரணமாகவே, 2006 ஓகஸ்ட் 07ஆம் நாள், கண்டி- திகணவில் வைத்து சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியான செனிவிரட்ண மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதையும், குற்றப் புலனாய்வுத் துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரிடம் தற்போது விசாரணை நடத்தப்படுகிறது.

போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த அந்தக் காலகட்டத்தில், செனிவிரட்ன அக்கரைப்பற்றில் பணியாற்றியிருந்தார். அவர் கருணா குழுவுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தார்.

இதனால் அந்தப் பகுதியில் இருந்த இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களைப் பயன்படுத்தி அவரைப் படுகொலை செய்தனர்.” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *