மேலும்

காணாமற்போனவர்களில் மூவர் மாலைதீவு சிறையில் – பரணகம ஆணைக்குழு கண்டுபிடிப்பு

maxwell_paranagama_commissionகாணாமற்போனவர்களில் நான்கு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இரண்டு அல்லது மூன்று பேர் மாலைதீவு சிறைச்சாலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், காணாமற்போனோர் குறித்து விசாரணை செய்யும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு,மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆறு நாள் சாட்சிய அமர்வுகளின் முடிவில் வவுனியாவில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையிலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

காணாமற்போன நான்கு பேர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

இவர்களில் இரண்டு அல்லது மூன்று பேர், மாலைதீவு சிறைச்சாலைகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெலிஓயாவில் காணாமற்போனதாக முறையிடப்பட்ட ஒருவர், இன்னொரு பெண்ணுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு சென்றுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது,

காணாமற்போன ஏனையோர் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.  அவர்களைக் கண்டறிய முடியாவிட்டாலும், அதற்கு சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வடக்கில் அதிகமாக சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரான முறைப்பாடுகளே செய்யப்பட்டுள்ளன. வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் பலர் முறையிட்டுள்ளனர். மேலும், புளொட், ஈபிஆர்எல்எவ், ஈபிடிபியின் டக்ளஸ் தேவானந்தாவும் பதிலளிக்க வேண்டும்.

ஆறு நாட்களில், காணாமற்போனோர் குறித்து வன்னியில் 1040 பேர் சாட்சியங்களை அளித்தனர். 306 புதிய முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதிய முறைப்பாடுகளில் இருந்து, எம்மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்பதை உணர முடிகிறது.

காணாமற்போனோர் தொடர்பான சரியான எண்ணிக்கையை எம்மால் கூறமுடியாது, ஏனென்றால், காணாமற்போனோரின் உறவினர்கள் வெவ்வேறு இடங்களில் இருப்பதால், வெவ்வேறு முறைப்பாடுகளைச் செய்துள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *