மேலும்

சாவகச்சேரி வெடிபொருட்கள் – இனவாதிகளே கூச்சலிடுகின்றனர் என்கிறார் வடக்கு ஆளுனர்

reginold-coorayசாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்தை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று இனவாதிகளே கூச்சலிடுவதாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டில் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கம் துரிதமாக முன்னெடுத்து வரும் நிலையில், இனவாதிகளால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

போரை வென்றதை விடவும் கடினமான விடயம் மக்கள் மனங்களை வெல்வதேயாகும். அந்த இலக்கை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடைந்துள்ளார். அதிகம் மக்கள் ஆதரவைப் பெற்ற தலைவர் என்றும் அவரையே குறிப்பிட முடியும்.

அரசாங்கம் இத்தகைய  கோணங்களில் பயணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத இனவாத சக்திகள் சில நடைமுறைச் சிக்கல்களை காரணம் காட்டி அப்பாவி மக்களை திசை திருப்ப முற்படுகின்றனர்.

இவர்கள் தான் சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் விவகாரத்தை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான செயல் என்று சுட்டிக்காட்ட முனைகின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக,  யாழ் கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்கவுடனான சந்திப்பில் வினவிய போது, போர், முடிந்த பின்னர், 25 தடவைகளுக்கும் அதிகமாக இவ்வாறான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சாவகச்சேரியில் மீட்கப்பட்ட சம்பவமும் அவ்வாறாதொன்றே என்றும் இதனை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட முடியாதெனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் போலியான செய்திகள் பரவுகின்றன. இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிடின் கடந்த காலங்களில் இடம்பெற்றது போன்ற கசப்பான அனுபவங்களை சந்திக்க நேரிடும். அவ்வாறான சூழலுக்கு முகம்கொடுக்க மக்கள் தயாரில்லை.

எமது நாட்டில் முப்பது வருட போர் அனுபவமுள்ள பலமிக்க இராணுவம் உள்ளது. அதனால் தேசிய பாதுகாப்புக்கு யாரும் இலகுவில் அச்சுறுத்தல் விடுக்க முடியாது என்பதை கருத்திற்கொள்ள வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *