மேலும்

சாவகச்சேரி வெடிபொருட்களுடன் இராணுவச் சிப்பாய்க்குத் தொடர்பா?

Suicide vest-ammunitionசாவகச்சேரியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டை, சந்தேக நபரான ரமேஸ் எனப்படும், எட்வேர்ட் ஜூலியனுக்கு, பெற்றுக் கொடுத்தவர், சி்றிலங்கா இராணுவத்தில் பணியாற்றும் ஒருவரின் சகோதரரே, என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சாவகச்சேரி வீட்டில், கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள், விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்டவை அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2001ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட அந்தப் பகுதியில், பல முறை தேடுதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டு ஜனவரி மாதமே, சிவதர்சன் என்பவரின் உதவியுடன் ரமேஸ் இந்த வீட்டில் குடியேறியுள்ளார் என்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிவதர்சன் ஒரு கனரக வாகன சாரதி என்றும், அவரே இந்த வீட்டை சந்தேக நபருக்குப் பெற்றுக் கொடுத்தவர் என்றும் கூறப்படுகிறது. சிவதர்சனும், ரமேசும், யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் சாரதிகளாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளனர்.

அதன் பின்னர், மேசன் வேலை செய்து வந்த ரமேஸ் சில மாதங்களில், சிறிய பாரஊர்தி ஒன்றையும், உந்துருளி ஒன்றையும் வாங்கியுள்ளார். அது அந்தப் பகுதி மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

13 வயதில் புலிகள் இயக்கத்தில் இணைந்த ரமேஸ் முருங்கனில் கல்வி கற்றவர். 2013ஆம் ஆண்டு தெல்லிப்பளை மருத்துவமனையில் ரமேசின் தாயார் மரணமாகும் வரை, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையில் தொடர்பு இருக்கவில்லை. 2009 இல், புதுமாத்தளன் சண்டையில் அவர் மரணித்து விட்டதாகவே, அவர்கள் நினைத்திருந்தனர்.

முதல் மனைவியை விட்டுப் பிரியும் வரை இவர், சுழிபுரத்தில் வசித்து வந்தார். அதன் பின்னர் சிவதர்சனின் துணையுடன்  மீசாலைக்கு இடம்பெயர்ந்தார்.

ரமேஸ் கைது செய்யப்பட்டதையடுத்து, சிவதர்சன் காணாமற்போயுள்ளார். சிவதர்சனின் சகோதரர், ஒருவர், போர் முடிவுக்கு வந்த பின்னர், முன்னைய அரசாங்கத்தினால், சிறிலங்கா இராணுவத்தில், தமிழர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட போது இணைந்து கொண்டவர் என்றும் தெரிய வந்துள்ளது.

தற்போது வடக்கில் உள்ள பிரதான இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றும், அந்த இராணுவ சிப்பாயும் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *