மேலும்

நுழைவிசைவு காலாவதியான 3,857 இலங்கையர்கள் இந்தியாவில் தங்கியுள்ளனர்

sri-lanka-passportநுழைவிசைவு காலாவதியான பின்னரும், இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் பட்டியலில், இலங்கையர்கள் இரண்டாமிடத்தில் இருப்பதாக, இந்திய மத்திய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சினால் இது தொடர்பான அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதன்படி, 2014ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் நாள் நிலவரப்படி, முறையான நுழைவிசைவு பெற்றுக்கொண்டு இந்தியாவுக்குள் நுழைந்த 28,500 வெளிநாட்டவர்கள், நுழைவிசைவு காலாவதியான பின்னரும், இந்தியாவில் தங்கியிருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு மேலதிக காலம் இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களில் பாகிஸ்தானியர்களே முதலிடத்தில் உள்ளனர். நுழைவிசைவு காலாவதியான பின்னரும் இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை 4,335 ஆகும்.

அதையடுத்து, இரண்டாமிடத்தில் இலங்கையர்கள் உள்ளனர். 3,857 இலங்கையர்கள், இந்தியாவில் நுழைவிசைவு காலாவதியான பின்னரும் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தென்கொரியா, ஈராக், அமெரிக்கா, தன்சானியா ஆகிய நாட்டவர்களே அதிகளவில் நுழைவிசைவு காலாவதியான நிலையில் இந்தியாவில் தங்கியுள்ளனர். இதில் 205, 2016ஆம் ஆண்டுக்கான தரவுகள் உள்ளடக்கப்படவில்லை.

நுழைவிசைவு காலாவதியான வெளிநாட்டவர்கள் அதிகம் தங்கியுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இங்கு 20,539 வெளிநாட்டவர்கள் நுழைவிசைவு காலாவதியான பின்னரும், தங்கியுள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 72 வீதமாகும்.

இதையடுத்து மகாராஸ்டிரா, மேற்கு வங்காளம், கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில், நுழைவிசைவு காலாவதியான வெளிநாட்டவர்கள் அதிகளவில் தங்கியுள்ளனர்.

2014ஆம் ஆண்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2,847 பேர் இந்திய அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டனர். அவர்களில், அதிகளவானோர் நைஜீரியர்களாவர். 1110 நைஜீரியர்களும், அதையடுத்து, 989 பங்களாதேஸ் நாட்டவர்களும் நாடு கடத்தப்பட்டிருந்தனர்.

2012ஆம் ஆண்டில், 7,503 பேரும், 2013ஆம் ஆண்டில், 6,903 பேரும், நாடு கடத்தப்பட்ட நிலையில், 2014ஆம் ஆண்டு திருப்பி அனுப்பப்பட்டோர் தொகை மிகக்குறைவாகும்.

1946ஆம் ஆண்டின் வெளிநாட்டவர்கள் சட்டத்தின் கீழ், வெளிநாட்டவரை நாடு கடத்தும் அதிகாரம், மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *