மேலும்

முடிவடைந்தது பிரகீத் கடத்தல் விசாரணை – கைது செய்யப்படுகிறார் கோத்தா?

gotaஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தக் கடத்தலுக்கு உத்தரவிட்ட முன்னைய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கைது செய்யப்படவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிவுக்கு வந்திருப்பதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் 9 அதிகாரிகளும், முன்னாள் விடுதலைப் புலிகள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இந்தக் கடத்தலுக்கு உத்தரவிட்ட முன்னைய அரசாங்கத்தின் மிக உயர்மட்ட அதிகாரி ஒருவர் மட்டும் இன்னமும் கைது செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளார்.

கடந்த புதன்கிழமையும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஸ்ராவ் சார்ஜன்ட் தர அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு கேணல் தர அதிகாரிகளும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்துவதற்கு உத்தரவிட்டது யார் என்பது பற்றிய முக்கியமான தகவல்களை இவர்கள் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கடத்தலை கேணல் சம்மி குமாரரத்னவே மேற்கொண்டார் என்பதற்குத் தேவையான ஆதாரங்கள் ஏற்கனவே திரட்டப்பட்டுள்ளன.இதன் அடிப்படையில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்தநிலையில், இந்த வழக்கில், முன்னைய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி விரைவில் கைது செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கைது செய்யப்படவுள்ள அந்த அதிகாரி முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதேவேளை கேணல் சம்மி குமாரரத்ன, இந்தக் குற்றத்தை மேற்கொள்ள யார் உத்தரவிட்டார் என்ற தகவலை இன்னமும் வெளியிடவில்லை என்று மற்றொரு தகவல் கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *