மேலும்

நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுத சிராந்தி – மகிந்தவும் கண்கலங்கினார்

நிதிமோசடிக் குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு நேற்று இரண்டாவது தடவையாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட யோசித ராஜபக்சவுக்கு, பிணை வழங்க நீதிவான் மறுத்த போது, அவரது தாயார் சிராந்தி ராஜபக்ச கண்ணீர் விட்டு அழுததுடன், மகிந்த ராஜபக்சவினது கண்களும் கலங்கிப் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லெப். யோசித ராஜபக்ச உள்ளிட்ட சந்தேக நபர்கள் நேற்று கடுவெல நீதிமன்றில் நிறுத்தப்பட்ட போது, அங்கு பெருந்திரளான பொதுமக்களும் அரசியல் பிரமுகர்களும் கூடியிருந்தனர்.

மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி சிராந்தி ராஜபக்ச ஆகியோர் நீதிமன்றினுள் இருந்தவாறு வழக்கு நடவடிக்கைகளை அவதானித்தனர்.

அதேவேளை, கோத்தாபய ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, தினேஸ் குணவர்தன, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, டலஸ் அழகப்பெரும, கெஹலிய ரம்புக்வெல்ல, உதித்த லொக்குபண்டார, சி.பி.ரத்நாயக்க, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் நீதுிமன்றம் வந்திருந்தனர்.

யோசித ராஜபக்சவை பிணையில் விடுவிக்க வேண்டும் என்று அவரது சட்டவாளர் விடுத்த கோரிக்கைக்கு, காவல்துறையினர் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அவர் விடுவிக்கப்பட்டால், விசாரணைகளைக் குழப்பலாம் என்று அவர்கள் நீதிவானிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, யோசித ராஜபக்சவின் பிணைக் கோரிக்கையை நிராகரிப்பதாக  நீதிவான் தம்மிக ஹேமபால அறிவித்தார்.

அப்போது, நீதிமன்றத்தில் இருந்த சிராந்தி ராஜபக்ச கண்ணீர் விட்டு அழுதார். மகிந்த ராஜபக்சவின் கண்களும் கலங்கியிருந்தன.

இதையடுத்து, வெளியே வந்த மகிந்த ராஜபக்சவும், சிராந்தி ராஜபக்சவும், ஊடகங்களிடம் கருத்து கூறாமலேயே புறப்பட்டுச் சென்றனர்.

அதேவேளை, யோசித உள்ளிட்டோரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டதை அறிந்த, நீதிமன்ற வளாகத்தில் இருந்த இளம்பெண்கள் பலர் கதறி அழுதனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *