மேலும்

சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற ஆசனம் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம்

Brad-adamsசிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து, நியூயோர்க்கை தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் சரத் பொன்சேகாவின் கட்டளையின் கீழ் செயற்பட்ட சிறிலங்கா படையினர், பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது சட்டவிரோமாக பீரங்கித் தாக்குதல்களை நடத்தியிருந்தனர். பாலியல் வல்லுறவுகளையும், ஏனைய பாலியல் வன்முறைகளையும் நிகழ்த்தியிருந்தனர். சரணடைந்தவர்கள் நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த மீறல்களுக்கு பொறுப்புக்கூற சிறிலங்கா அரசாங்கம் தவறியதனாலேயே, கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம், ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றும் நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இது பரந்தளவிலான மீறல்களுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூத்த இராணுவ அதிகாரிகளை சிறிலங்கா அரசாங்கம் பாதுகாக்கலாம் என்ற சமிக்ஞையையே வழங்கியிருக்கிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

“பொறுப்புக் கூறல் தொடர்பாக கண்துடைப்பு நடவடிக்கைகளை எடுக்காது அதனை தீவிரமாக முன்னெடுத்து, சிறிலங்கா மக்களுக்கும், ஐ.நாவுக்கும் அர்த்தமுள்ள வகையில் தனது கடப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் நிரூபிக்க வேண்டும்.

போர்க்குற்றங்களுக்கு இந்த அரசாங்கம் நீதியை வழங்கும் வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று நம்பியிருந்த பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினரின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் பொன்சேகாவின் நியமனம் அமைந்திருக்கிறது.

எல்லா இலங்கையர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று தலைவர்கள் உறுதியான நிலையை காண்பிக்க வேண்டிய இந்த நேரத்தில் சிறிலங்கா அதிபரும், பிரதமரும் பொறுப்புக்கூறல் விடயத்தில் வருத்தமளிக்கும் சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

சரத் பொன்சேகாவுக்கு  நாடாளுமன்ற ஆசனமும், உயர் இராணுவப் பதவியும், அளிக்கப்பட்டிருப்பதானது, இவர்களின் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான நல்லெண்ணத்தை அச்சுறுத்துவதாக உள்ளது ” என்றும்,  பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *