மேலும்

காணாமற்போனவர்கள் அனைவரும் இறந்து விட்டனர்- உறுதிப்படுத்துகிறார் கோத்தா

gotabhaya-rajapakseகாணாமற்போனவர்களில் சிலர் கனடாவிலும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் வாழ்வதாகவும், ஏனையோர் அனைவரும் இறந்து விட்டனர் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச.

இது தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

கேள்வி- போரின் இறுதிக்கட்டத்தில் போர் தவிர்ப்பு வலயத்தில் பெருந்தொகையான  பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? அந்தப் பழியை ஏற்றுக்கொள்கிறீர்களா?

பதில் – எங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நாம் மிகவும் தெளிவாக இருக்கிறோம்.தனிப்பட்ட ரீதியில் ஒரு சிலர் குற்றங்களை இழைத்திருக்கலாம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்பதே எமது நிலைப்பாடு. நாம் ஒரு விசாரணை நீதிமன்றத்தை நியமித்தோம். அதற்கு காலம் எடுக்கும். காணாமற்போனோர் குறித்த ஆணைக்குழு இன்னமும் இருக்கிறது.  நாங்கள் தீவிரவாதிகளுடன் தான் போரிட்டோம், பொதுமக்களுடன் அல்ல.

கேள்வி- காணாமற்போனவர்களில் பெரும்பாலானவர்கள் உயிருடன் இல்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளாரே?

பதில் – அவர்களில் சிலர் கனடாவிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் வாழ்கின்றனர்

கேள்வி- ஏனையோரின் நிலை என்ன?

பதில்- ஏனையவர்கள் இறந்து விட்டனர், அதனை நான் உறுதிப்படுத்துகிறேன்.

கேள்வி – கைது செய்யப்பட்டு வீடு திரும்பாதவர்கள் மற்றும் தடுப்பு முகாம்களில் இல்லாதவர்களைப் பற்றி நாம் கேட்கிறோம்-

பதில் – தமது பிள்ளைக்கு என்ன நடந்தது என்று ஒவ்வொரு பெற்றோருக்கும் தெரியும். விடுதலைப் புலிகள் கொண்டு சென்றார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் அவர்களின் குடுடும்பத்தினர் காணாமற்போய் விட்டதாக கூறுகின்றனர். அவர்கள் விடுதலைப் புலிகளின் போராளிகள் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் போரில் கொல்லப்பட்டு விட்டனர்.

கேள்வி- ஆனால் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில், கூட, இராணுவத்தினால் கடத்தப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே?

பதில்- இல்லை அது வேறொரு விடயம். விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இராணுவத்தினரால் கடத்தல்களை மேற்கொள்ள முடியாது. பிரதேசத்தை அடைவதற்கு ஒரு டிவிசன் படைப்பிரிவு தேவைப்பட்டது. ஒரு கிராமத்துக்குள் நுழைவதற்கு ஆறு மாதங்கள் கூடச் சென்றன. அங்கு என்ன இருந்தது என்று பலருக்குத் தெரியாது. நாங்கள் அந்தப் பகுதியை சுற்றிவளைத்ததாக சிலர் நினைக்கிறார்கள். நாங்களும் 5000 இராணுவத்தினரை இழந்திருக்கிறோம். அப்படியானால் புலிகள் தரப்பில் எவ்வளவு பேர் இறந்திருப்பார்கள்? 3000 இராணுவத்தினர் காணாமற்போயுள்ளனர். அவர்கள் போரில் இறந்து விட்டனர். ஆனால் அவர்களின் சடலங்கள் மீட்கப்படவில்லை.

கேள்வி- இராணுவத்தினரால் கடத்தப்பட்ட அல்லது சரணடைந்த பின்னர் காணாமற்போனவர்கள் பற்றி பிரதமர் பேசவில்லை என்கிறீர்களா?

பதில்- இல்லை. அவர், பொதுவாக காணாமற்போனவர்கள் பற்றிக் கூறியிருக்கிறார். ஒன்பது பேர் மட்டுமே தமது பிள்ளைகள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாக கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *