மேலும்

தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளை கப்பலில் அனுப்பி வைக்க சுஸ்மா இணக்கம்

Sushma-Swarajதாயகம் திரும்ப விரும்பும், இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் பட்டியல் ஒன்றைத் தயார் செய்யும் படியும், அவர்களைக் கப்பலில் அனுப்பி வைப்பதற்கான ஒழுங்குகளைச் செய்வது குறித்து ஆராய இந்தியா தயாராக இருப்பதாகவும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் கொழும்பில், ஈழ ஏதிலிகள் மறுவாழ்வு அமைப்பைச் சேர்ந்த சந்திரகாசனைச் சந்தித்த போதே, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.

சென்னையிலும், சிறிலங்காவிலும் செயற்படும், ஈழ ஏதிலிகள் மறுவாழ்வு அமைப்பின் பொருளாளர் சந்திரகாசனும், அதன் தலைவர் சூரியகுமாரியும், இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளில், பெருமளவானோர் தாயகம் திரும்ப விரும்புவதாகவும், எனினும், அவர்கள் தமது உடைமைகளுடன் திரும்புவதற்கும், அவர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் இந்திய அரசாங்கம் உதவ வேண்டும் என்று சந்திரகாசன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நீண்டகாலமாக தமிழ் நாட்டில் வசிக்கும் அகதிகள் சேர்த்து வைத்துள்ள உடைமைகளை கைவிட்டுச் செல்ல முடியாது என்றும், விமானம் மூலம் அதிகளவு பொருட்களை கொண்டு செல்ல முடியாது என்பதாலும், அகதிகளை இலகுவாகவும், குறைந்த செலவுடனும், அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள துறைமுகங்களுக்கு கப்பலில் ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

காங்கேசன்துறை, தலைமன்னார், திருகோணமலை துறைமுகங்களுக்கு அகதிகளை ஏற்றிச் செல்லலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சாதகமான பதிலை அளித்திருப்பதாக, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சவிகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

சுயவிருப்ப அடிப்படையில், தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளின் பட்டியல் ஒன்றை ஈழ ஏதிலிகள் மறுவாழ்வு அமைப்பை தயார் செய்யுமாறு, சந்திரகாசனிடம், சுஸ்மா சுவராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், விகாஸ் ஸ்வருப், அவ்வாறு தாயகம் திரும்ப விரும்புவோரின் பட்டியல் ஒன்று எம்மிடம் தரப்பட்டால், அவர்களை அனுப்பி வைப்பதற்கு நாம் எவ்வாறு உதவலாம், என்பது குறித்து, ஆராயலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்

அகதிகள் திரும்புவதற்கு கப்பல்களை வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்திருப்பதாக, சந்திரகாசன் தெரிவித்திருப்பது குறித்து கருத்து வெளியிட்ட, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், அத்தகைய உதவிகள் அளிக்கப்படும் என்றும், ஆனால் கப்பல்களில் ஏற்றிச் செல்லப்படுவதற்கு போதியளவு அகதிகள் விருப்பம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அகதிகள் தாயகம் திரும்புவது சுயவிருப்பின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும் என்றும், வற்புறுத்தலின் பேரில் இருக்கக்கூடாது என்றும் நாம் அவர்களிடம் கூறியுள்ளோம்” என்றும் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *