இந்திய மீனவர்களின் ஊடுருவல் 3 மாதங்களுக்குள் நிறுத்தப்படும் – கூட்டமைப்புக்கு சுஸ்மா வாக்குறுதி
இந்திய மீனவர்கள் வட பகுதி கடற்பகுதியில் அத்துமீறி நுழைவது மூன்ற மாதங்களுக்குள் நிறுத்தப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.
நேற்று கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் நடந்த சந்திப்பின் போதே, இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் ஊடுருவலால், வடக்கிலுள்ள மீனவர்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள், சுஸ்மா சுவராஜின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.
அப்போது அவர், மூன்று மாதங்களுக்குள் இந்த ஊடுருவல் நிறுத்தப்படும் என்று உறுதியளித்ததாக, பேச்சுக்களில் பங்கேற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக பேச்சுக்களை நடத்த சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அடுத்த மாதம் புதுடெல்லிக்குச் சென்று பேச்சு நடத்தவுள்ளார்.
நேற்றுமுன்தினம் நடந்த இந்திய- சிறிலங்கா கூட்டு ஆணைக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.