யாழ்ப்பாணத்தில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் – பல்வேறு சந்திப்புகளில் பங்கேற்பு
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டதுடன், போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
யாழ். மாநகரசபை மைதானத்தில் இன்று காலை உலங்குவானூர்தி மூலம், வந்திறங்கிய ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், அங்கு காத்திருந்த காணாமற்போனோரின் உறவினர்களுடன் சற்று நேரம் கலந்துரையாடினார்.
காணாமற்போனோரின் உறவினர்களை சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளதாகவும், அந்த நேரத்தில் சந்திப்பதாகவும் கூறி அங்கிருந்து சென்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளர், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
அத்துடன், வடக்கு மாகாண ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ் பாலிஹக்காரவை அவரது செயலகத்தில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சந்தித்துப் பேசினார்.
மேலும், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கும் சென்று வழிபட்ட அவர், ஆலய சுற்றுப் புறத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்திய முஸ்லிம்களை சந்தித்து அவர்களின் மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.
பின்னர், சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்துக்குச் சென்று, 25 ஆண்டுகளாக தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து, முகாமில் தங்கியிருக்கும் மக்களைச் சந்தித்தார்.
அப்போது, அடுத்த முறை தான் வரும் போது, உங்களைச் சொந்த இடங்களில் சந்திப்பேன் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காணாமற்போனோரின் உறவினர்களின் சார்பில் ஐந்து பேர், ஐ.நா மனித உரிமை ஆணையாளரை சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பை விட, அவர்களின் வழக்குகள் சரியான முறையில் விசாரிக்கப்பட்டு, விடுதலை செய்யப்படுவதே சரியானதாக அமையும் என்று, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஊடகவியலாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
சிறையில் வாடும் இளைஞர்கள் விடயம் தொடர்பாக பேசிய போது, அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதை விட அவர்களின் வழக்கு விசாரணைகளை சரியாகவும், துரிதமாகவும் முன்னெடுத்து அவர்களை விடுதலை செய்வது தான் சரியானதாக அமையும் என அவர் தெரிவித்தார்.
அரசியல் கைதிகள் தொடர்பான விடயங்களை சிறிலங்கா அரசாங்கத்திடம் கூறி , கைதிகள் விடுதலை தொடர்பாக விரைந்து செயற்படுமாறு நான் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் வருகை சிறையில் வாடும் இளைஞர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்தது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகத்திற்கு வந்து மக்களின் நிலமைகள் தொடர்பில் அறிவது எமக்கு நெகிழ்சி அளிக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.