தமிழர்களின் உரிமைப் பிரச்சினையை கைவிட்டது இந்தியா – இந்திய ஊடகம்
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின் சிறிலங்கா பயணத்தின் முடிவில் நேற்று வெளியிடப்பட்டுள்ள, கூட்டறிக்கையில், இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த தமிழ்மக்களின் அரசியல் உரிமைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று வடஇந்திய மாநிலங்களில் இருந்து வெளியாகும், தி ரிபியூன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மீனவர்கள் விவகாரம் தொடக்கம், இடம்பெயர்ந்த மக்களுக்கு, வீடுகளைக் கட்டிக் கொடுக்கும், இந்தியாவின் உதவி வரை இந்த கூட்டறிக்கையில் இடம்பெற்றுள்ள போதிலும், தமிழர்களின் உரிமைகள் பற்றிய விடயம் மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்திய, சிறிலங்கா அரசாங்கங்கள் திட்டமிட்டே, இந்த விவகாரத்தை தவிர்த்துள்ளதாக பேச்சுக்களுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்ச் சிறுபான்மையினரின் அரசியல் உரிமை கோரிக்கைகளுக்கு இந்தியா உதவுவதை, சிறிலங்கா மக்கள் சாதகமாக பார்க்கவில்லை என்றும், மாறாக அதனை உள்நாட்டு விவகாரத்தில் மற்றொரு தலையீடாகவே கருதுவதாகவும்,சிறிலங்கா உணருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சிறிலங்காவில் தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினமும், கௌரவம், நீதி, சமத்துவம்,மற்றும் அமைதியாக வாழ்வதற்கான அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளுக்கு நாம் துணையாக இருப்போம் என்று கூறியிருந்தார்.
அத்துடன், 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அதற்கு அப்பால் செல்வது இந்த முயற்சிகளுக்கு பங்களிக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா, 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதையும், தமிழர்களுக்கு சமமான உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதற்கும் அழுத்தம் கொடுத்து வந்திருக்கிறது. என்றும் தி ரிபியூன் செய்தியில் கூறப்பட்டுள்ளது.