எக்னெலிகொட கடத்தல் விவகாரம் – மேலும் நான்கு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் விரைவில் கைது
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேலும், நான்கு அதிகாரிகள் கைது செய்யப்படவுள்ளனர்.
அடுத்த சில நாட்களுக்குள் இவர்கள், கைது செய்யப்படுவார்கள் என்று, குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே இந்தச் சம்பவம் தொடர்பாக இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கைத்தொலைபேசிப் பதிவுகள் ஆராயப்பட்டதன் அடிப்படையிலேயே மேலும் நான்கு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்படவுள்ளனர்.
அதேவேளை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை, 2010 ஜனவரி 24ஆம் நாள், பெலவத்தைக்கு அருகிலுள்ள இடமொன்றில், வைத்து, சட்டவிரோதமாக கடத்தியது, தடுத்து வைத்தது, காணாமற்போகச் செய்யப்பட்டது போன்ற இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவு திரட்டியுள்ளது.
கிரித்தலவில் உள்ள 3ஆவது இராணுவப் புலனாய்வு முகாமில் வைத்து விசாரிக்கப்பட்ட பின்னர், பிரகீத் எக்னெலிகொட, அக்கரைப்பற்றுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்பதை, குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைகள் உறுதி செய்துள்ளன.
கிரித்தல இராணுவ முகாமில் விசாரிக்கப்பட்ட பின்னர், பிரகீத் எக்னெலிகொட எந்த இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று சரியான இடத்தை அடையாளம் காண்பதற்கு, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட அக்கரைப்பற்று தொலைபேசிக் கோபுரம் வழியான தொடர்பாடல்கள் பற்றிய தரவுகளின் உதவியுடன், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.