ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த 11 பேர் கொண்ட ஆலோசனை செயலணி- ஐ.நா நிபுணர் வருகிறார்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக 11 பேர் கொண்ட ஆலோசனைச் செயலணி ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் நியமித்துள்ளது.
அடுத்த வாரம் கொழும்பு வரவுள்ள உண்மை, நீதி, இழப்புகள் மீள நடக்காது என்பதை உத்தரவாதப்படுத்துவது தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளரான, பப்லோ டி கிரெய்ப்புடன் இணைந்து இந்தக் குழு பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக வெளிவிவகார அமைச்சினால், மேற்குலக நாடுகள், மற்றும் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட செயற்திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு கட்ட கலந்தாய்வு செயல்முறைகளின் வரைமுறைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன. வலைத்தள செயல்முறைகள் எல்லாமொழிகளிலும் இடம்பெறவுள்ள அதேவேளை, நேர்முக கலந்துரையாடல்,செயல்முறை, குறிப்பாக சிறுவர்கள், இராணுவம், அங்கவீனமுற்ற போராளிகள், கணவனை இழந்தவர்கள், முன்னாள் போராளிகள் ஆகியவர்களை மையப்படுத்தி இடம்பெறவுள்ளது.
வலைத்தள செயல்முறைகள் ஐ.நா சிறப்பு அறிக்கையாளரின் வருகைக்குப் பின்னர், ஆரம்பிக்கப்படும்.
பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய, கலந்தாய்வு செயல்முறை செயல்திட்டம், அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படும்.
இதற்காக மனோரி முத்தெட்டுவேகமவை தலைவராக கொண்ட 11 பேர் கொண்ட குழு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில், கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, காமினி வியாங்கொட, பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு, விசாகா தர்மதாச, தர்மசிறி பண்டாரநாயக்க, கலாநிதி பர்ஸானா ஹனீபா, சட்டவாளர் சாந்தா அபிமன்னசிங்கம், மிராக் ரகீம், பேராசிரியர் தயா சோமசுந்தரம், கமீலா சமரசிங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த செயலணி, நல்லிணக்கம் தொடர்பான வழிப்படுத்தும் குழுவுக்கு அறிக்கை அளிக்கும். பிரதமரின் செயற்குழு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை வடிவமைப்பது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடும்.
வழிப்படுத்தும் குழு தற்போது, கையில் உள்ள தெரிவுகள் குறித்து நிபுணர்களுடன் கலந்துரையாடி வருவதாக அரசாங்க குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
கலந்தாய்வு செயலணிக்கு, செயலகம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.