வலுவான சிறிலங்காவைப் பார்க்க விரும்புகிறது அமெரிக்கா – தோமஸ் சானொன்
சிறிலங்காவின் தொடர் முன்னேற்றங்களைக் கொண்டு, தமது உறவுகளை வரும் ஆண்டுகளில் மேலும் விரிவுபடுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக, அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலராக பிரேரிக்கப்பட்டுள்ள தோமஸ் சானொன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று காலை லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில், நிகழ்த்திய உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் நிகழ்த்திய உரையில், “உலகப் பொருளாதாரத்துக்கு பங்களிக்கும், மனித உரிமைகள், ஜனநாயகம், நீதியை ஊக்குவிக்கும், அனைத்துலகச் சட்டங்களை நிலை நிறுத்த உதவும், அனைத்துலக சமூகத்தின் ஒரு தலைவராக -வலுவான சிறிலங்காவைப் பார்க்க அமெரிக்கா விரும்புகிறது.
சிறிலங்காவில் உள்ள தொழில் முனைவோர், ஏராளமான வளங்கள், கேந்திர அமைவிடம், என்பன அந்த நிலையை அடைவதற்கு ஏதுவாக உள்ளன.
சிறிலங்காவின் கடல்சார் முக்கியத்துவம் நீங்கள் அறிந்ததே. அது நீண்ட வரலாற்றைக் கொண்டது.
பண்டைய கிரேக்கம், ரோம், அரேபியா, சீனா ஆகிய நாடுகளின் கப்பல்கள் சிறிலங்கா கடல் வழியாக பயணித்துள்ளன. இங்குள்ள துறைமுகங்களில் தரித்துச் சென்றுள்ளன.
வரவிருக்கும் பத்தாண்டுகளில்,உலகின் மையக் கவனம் பெற்றதாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பொருளாதாரம், அரசியல், மற்றும் பாதுகாப்பு என்பன, விளங்கும். இதில் சிறிலங்கா பங்களிக்கும் என்று நம்புகிறோம்.
உலக அமைதிக்கான சவால்களைச் சமாளிக்க சிறிலங்கா தனது ஆயுதப்படைகளை அமைதிகாப்பு படையினராக அனுப்பி பங்களித்து வருகிறது.
அமைதிப்படையில் சிறிலங்காவின் கூடுதல் படைப்பிரிவுகளை இணைப்பதற்கு சிறிலங்கா அதிபர் முன்வந்துள்ளதை வரவேற்கிறோம்.
பிரகாசமான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கு சிறிலங்கா ஆயுதப்படைகள் ஆக்கபூர்வமான பங்காற்ற முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது.
சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான கூட்டு தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது.
சிறிலங்காவின் தொடர் முன்னேற்றங்களைக் கொண்டு, எமது உறவுகளை வரும் ஆண்டுகளில் மேலும் விரிவுபடுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
ஆண்டின் மிகவும் குளிர் காலமான வரும் பெப்ரவரி மாதம் வொசிங்டனில் சிறிலங்கா அமெரிக்க கூட்டுப் பேச்சுக்களில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்தவுள்ளோம்.
இந்தப் பேச்சுக்கள் நான்கு முக்கிய விடயங்களைக் கொண்டதாக அமைந்திருக்கும்.
முதலாவது – ஆட்சி, அபிவிருத்தி ஒத்துழைப்பு, மக்களுக்கிடையிலான உறவுகள்.
இதில், நீதி மற்றும் நல்லிணக்கத்துக்காக கல்விப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட அனைத்தும் அடங்கும்.
இரண்டாவது- பொருளாதார ஒத்துழைப்பு.
இதில், பெண்களை வலுவூட்டல், முதலீட்டுச்சூழல், சுத்தமான சக்தி என்பன உள்ளடங்கும்.
மூன்றாவது- பாதுகாப்பு ஒத்துழைப்பு.
இதில் அமைதிகாப்பு மற்றும் பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு, தற்கால மற்றும் எதிர்கால சவால்களைச் சமாளிக்க சிறிலங்காவின் இராணுவத்தை தயார்படுத்த உதவுதல் என்பன கவனத்தில் கொள்ளப்படும்.
நான்காவது- அனைத்துலக மற்றும் பிராந்திய விவகாரங்கள்.
காலநிலை மாற்றத்துடன் போராடுவதற்கான முயற்சிகள், கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் என்பன அடங்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.