கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்ட நியமனக் கடிதங்கள்
வடக்கு, கிழக்கில் ஆறு மாவட்டங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கையெழுத்துடன் இதற்கான நியமனக் கடிதங்கள், அவசர அவசரமாக அதிபர் செயலகத்தினால் தொலைநகல் மூலம் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக மாவை சேனாதிராசா நியமிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்துக்கு, எஸ்.சிறீதரனும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சிவமோகனும், வவுனியா மாவட்டத்துக்கு சாள்ஸ் நிர்மலநாதனும், மன்னார் மாவட்டத்துக்கு செல்வம் அடைக்கலநாதனும், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு சிறீநேசனும், அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பதவிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அந்த வாக்குறுதியை மீறும் வகையில் ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்த பதவிகள் வழங்கப்பட்டன.
இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதியை மீறிவிட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தநிலையிலேயே, அவசர அவசரமாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேருக்கான இணைத்தலைவர் நியமனக் கடிதங்களை சிறிலங்கா அதிபர் செயலகம் அனுப்பியுள்ளது.
அதேவேளை, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் நியமனம் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமருடன் பேச்சு நடத்தப்படும் என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
முன்னர் இணைத் தலைவர்ளாக நியமிக்கபட்ட அரச ஆதரவாளர்களுடைய நிலமை என்ன அவர்களுக்கு பதவி விலக்கல் கடிதம் ஜனாதிபதியால் அனுப்பி வைக்கப்பட்டதா???