மேலும்

கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் கூடாது – வடக்கு முதல்வருக்கு இந்தியத் தூதுவர் அறிவுரை

Cm-Sinhaஅரசியல்தீர்வு ஒன்றை எட்டுவதற்கான சூழ்நிலைகள் உருவாகியுள்ள சந்தர்ப்பத்தில், தமிழர் தரப்பு பிளவுபடாமல், ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா வலியுறுத்திக் கூறியுள்ளார்.

நேற்றுமுன்தினம் மாலை யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, இந்தியத் தூதுவர் வை.கே. சின்ஹா சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

சுமார் இரண்டு மணிநேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போதே, தற்போதைய நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்படக் கூடிய பிளவுகள், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி விடும் என்று இந்தியத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்கள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்றும், முரண்படாமல் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.

கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டால், பெரும்பான்மையினத்தவர்கள் அதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தமிழர்களின் உரிமைகளை மறுக்கக் கூடிய அபாயம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல்தீர்வு ஒன்றைக் காண்பதற்கான சூழல் நெருங்கிவரும் நிலையில், பிரிந்து செல்லும் முடிவை எடுக்கக்கூடாது என்றும் இந்தியத் தூதுவர், வை.கே.சின்ஹா, வடக்கு மாகாண முதலமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

இதன்போது, தமக்குள் இருப்பது, கொள்கை ரீதியான சில முரண்பாடுகளே என்றும் தமிழர்களின் உரிமைகளைப் பெறும் விடயத்தில் கூட்டமைப்பு ஒன்றபட்டுச் செயற்படும் என்று இந்தியத் தூதுவரிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *