மேலும்

காணாமற்போனோரைத் தேடும் முயற்சியில் ஒரு நம்பிக்கைக் கீற்று – அமந்த பெரேரா

yathusanதனது கணவரைக் கடத்திச் சென்ற நபர்கள் சிறிலங்காப் படையினருடன் தொடர்புபட்டவர்கள் என உத்தரை உறுதிபடத் தெரிவித்தார்.மூன்று பத்தாண்டு கால உள்நாட்டு யுத்தமானது முடிவிற்கு வரும் வேளையிலேயே உத்தரையின் கணவரும் கடத்தப்பட்டார்.

இவ்வாறு ஐபிஎஸ் செய்திச் சேவைக்காக, அமந்த பெரேரா எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

தவராசா உத்தரையின் கணவர் மார்ச் 20, 2009ல் காணாமற் போனார்.  தற்போது உத்தரையிடம் உள்ள மிக முக்கியமான ஆவணங்கள் மற்றும் இவரது கணவரின் ஒளிப்படங்கள் போன்றன பழைய பைகளுக்குள் வைக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமே உத்தரையின் மிக முக்கியமான உடமைகளாகும்.

36 வயதான உத்தரை இரண்டு பிள்ளைகளின் தாயாராவார். இவரது கணவர் தனது கால்நடையைப் பராமரித்து விட்டு வீடு திரும்பும் வழியிலேயே காணாமற் போனார். இவருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாது.

‘அவர்கள் எனது கணவரைக் கடத்திச் சென்றனர். அவர்கள் தான் இவரைக் கூட்டிச் சென்றிருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். இதனை யார் செய்தார் என்பதையும் நான் அறிவேன்’ என உத்தரை தெரிவித்தார்.  தனது கணவரைக் கடத்திச் சென்ற நபர்கள் சிறிலங்காப் படையினருடன் தொடர்புபட்டவர்கள் என உத்தரை உறுதிபடத் தெரிவித்தார்.

மூன்று பத்தாண்டு கால உள்நாட்டு யுத்தமானது முடிவிற்கு வரும் வேளையிலேயே உத்தரையின் கணவரும் கடத்தப்பட்டார். உத்தரை போன்ற சிறுபான்மைத் தமிழ் மக்களிற்கு தனிநாடு கோரியே தமிழ்ப் புலிகள் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

உத்தரை, தலைநகர் கொழும்பிலிருந்து 350 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் பாவற்கொடிச்சேனை என்ற பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

காணாமற்போன தந்தையுடன் தாய் உத்தரை எடுத்துக் கொண்ட படத்துடன் அவர்களின் 14 வயது மகன் யதுசன்.

காணாமற்போன தந்தையுடன் தாய் உத்தரை எடுத்துக் கொண்ட படத்துடன் அவர்களின் 14 வயது மகன் யதுசன்.

தொலைவில் அமைந்துள்ள, போக்குவரத்து மற்றும் பொதுச் சேவைகள் மிகவும் அரிதாகக் காணப்படும் கிராமம் ஒன்றில் உத்தரை வாழ்கின்ற போதிலும் இவர் தனது கணவர் தொடர்பில் நீதியைப் பெற்றுக் கொள்வதற்காகப் போராடி வருகிறார்.

இவர் தனது கணவர் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக காவற்துறை, அதிபர் ஆணைக்குழு மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புக்களுடனும் தொடர்பை மேற்கொண்டுள்ளார். ஆனாலும் இவர் இதுவரை தனது கணவர் தொடர்பில் எவ்வித தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

உத்தரை தனது கணவர் இறந்துவிட்டார் என பதிவு செய்தால் இவருக்கு இழப்பீடாக 100,000 சிறிலங்கா ரூபா வழங்கப்படும் என சிறிலங்காவின் குற்றவியல் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உத்தரையிடம் தெரிவித்திருந்தார்.

‘நான் ஏன் அவ்வாறு பதிய வேண்டும்? நான் உண்மையைக் கண்டறிவதற்காகப் போராடுவேன்’ என உத்தரை தெரிவித்தார்.

முன்னாள் போர் வலயத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் காணாமற்போன தமது உறவுகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். போர் முடிவடைந்த பின்னர் காணாமற்போனோர் தொகை இன்னமும் அதிகரித்துள்ளது.

2013 தொடக்கம் காணாமற் போனோர் தொடர்பாக பதிவுகளை மேற்கொள்ளும் சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவின் காணாமற்போனோர் தொடர்பான பிரிவானது இதுவரை 20,000 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளது. இவற்றுள் 5000 முறைப்பாடுகள் காணாமற் போன சிறிலங்காப் படையினருடன் தொடர்புபட்டதாகும்.

1990 இலிருந்து காணாமற் போனோர் தொடர்பாகப் பதிவு செய்து வரும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமானது 16,604 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 40,000 வரையான உயிர்கள் காவுகொள்ளப்பட்டதாக ஐ.நா வல்லுனர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கை 90,000 வரை அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் குழுவின் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘இந்த எண்ணிக்கையானது எவ்வளவு தூரம் அதிகரித்துள்ளது அல்லது குறைந்துள்ளது என்பது இங்கு பிரச்சினையல்ல. ஏனெனில் உண்மையில் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை போரில் அகப்பட்டு தற்போது உயிருடன் வாழும் ஒவ்வொருவருக்கும் நன்கு தெரியும்’ என வல்லிபுரம் அமலநாயகி கூறுகிறார்.

இவரது கணவர் பெப்ரவரி 2009ல் காணாமற் போனார். இவர் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த வேளையிலேயே காணாமற் போயுள்ளார்.

காணாமற் போனோர் குடும்பங்களுக்கான சமூகத் தலைவியாக அமலநாயகி செயற்படுகிறார். தனது வாழ்வில் கடந்த ஆறு ஆண்டுகளும் மிகவும் கடினமான ஒரு காலப்பகுதியாக உள்ளதாக இவர் கூறுகிறார்.

‘நாங்கள் காணாமற் போன எமது உறவுகளைத் தேடி அலைந்தபோது குற்றவாளிகள் போல் நடத்தப்பட்டோம்’ என அமலநாயகி தெரிவித்தார்.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்யுமாறு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுத்த போது சிறிலங்காவின் முன்னாள் மகிந்த ராஜபக்ச அரசாங்கமானது இதனை கருத்திலெடுக்கவில்லை. அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் இந்த அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

இதில் காணாமற் போனோர் தொடர்பான விவகாரமும் உள்ளடங்குகிறது. ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் இறுதி மாதங்களில் இந்த விடயங்கள் தொடர்பில் சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அது செயற்படுத்தப்படவில்லை.

கடந்த ஜனவரியில் சிறிலங்காவின் ஆட்சிப்பொறுப்பை மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்ட பின்னர் அனைத்தும் மாற்றமுற்றது. ஐ.நாவுடன் சிறிசேனவின் அரசாங்கம் மீண்டும் தனது செயற்பாடுகளை புதுப்பித்துக் கொண்டது.

காணாமற் போனோர் தொடர்பாக விசாரணை செய்து இவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீட்டை வழங்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் சிறிசேன அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது.

சிறிசேனவின் அரசாங்கம் காணாமற் போனோர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கும் இதனை உறுதிப்படுத்தி அத்தாட்சிப்பத்திரங்களை வழங்குவதற்குமான ஆணைக்குழு ஒன்றை உருவாக்கவுள்ளது.

காணாமற் போனமை மற்றும் கடத்தப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்ட அறிக்கை ஒன்றை அதிபர் ஆணைக்குழு கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரின் தடுப்பிலுள்ளபோதே இராணுவத்துடன் தொடர்புபட்ட குழுக்களால் கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாக இந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘இது ஒரு அரசியல் தந்திரம் அல்ல. இந்த விவகாரம் தொடர்பில் நாங்கள் மிகவும் தீவிரமாகப் பணியாற்றுகிறோம்’ என சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ராஜபக்சவின் ஆட்சிக்கு எதிராக தற்போதைய அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது விசுவாசிகளால் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பரப்புரைகளின் போது காணாமற் போன ஆயிரக்கணக்கான வழக்குகளை விசாரணை செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

‘இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நாங்கள் உண்மையைக் கண்டறிய வேண்டும். இது எவ்வளவு தூரம் கடினமானதாகவும் அசௌகரியமானதாகவும் இருந்தாலும் கூட நாங்கள் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்’ என சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

காணாமற் போனோர் தொடர்பில் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் விரைவான நடவடிக்கையை முன்னெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகமாகக் காணப்படுகிறது.

‘காணாமற் போனோர் தொடர்பில் மெதுவாகவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் இது தொடர்பில் தான் நடவடிக்கையை முன்னெடுப்பேன் என்பதை சிறிலங்காவின் அரசாங்கம் காண்பிக்கின்றது. தற்போது இதற்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவும் காணப்படுகிறது.

ஆனால் ஒவ்வொருவரையும் நம்பிக்கை கொள்ளச் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது’ என சிறிலங்காவின் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று இயக்குனர் ஜெகன் பெரேரா தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச தொடர்பாகவும் அவருக்கு ஆதரவான பெரும்பான்மை சிங்கள மக்கள் தொடர்பாகவும் மட்டுமே தற்போதும் சிறிசேன அரசாங்கம் கவலை கொள்வதாக கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காணாமற் போனோரின் குடும்பத்தினருக்கு குறைந்தது புதியதொரு நம்பிக்கைக் கீற்றாவது தென்படுகிறது.

‘நாங்கள் எமது அன்புக்குரிய உறவுகளை பல பத்தாண்டுகளாகத் தேடிவருகிறோம். உங்களது கணவருக்கு என்ன நடந்தது என்பது கூடத் தெரியாது ஒரு பத்தாண்டாக வாழ்வதென்பது எவ்வளவு கடினமானது என்பது நீங்கள் நினைத்துப் பாருங்கள். இது மிகவும் பயங்கரமான துன்பியல் நிகழ்வு. தற்போதாவது இந்தப் பிரச்சினைக்குரிய தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்’ என அமலநாயகி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *