மேலும்

கொழும்புத் துறைமுக விரிவாக்கத் திட்டம் – சீனாவுடன் போட்டியில் குதிக்கிறது இந்தியா?

colombo-harbourகொழும்புத் துறைமுக விரிவாக்கத் திட்டத்தில், இந்தியாவின் அரசுத்துறை மற்றும் தனியார் துறைறைச் சேர்ந்த துறைமுக நிறுவனங்களை ஈடுபடுவதை ஊக்குவிப்பதில் இந்திய அரசாங்கம் அக்கறை காண்பிப்பதாக புதுடெல்லி அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவிடம் அணுகியுள்ளது.

அத்துடன், தெற்காசியாவின் மிகவும் பரபரப்பான துறைமுகமான கொழும்புத் துறைமுகத்தின், கிழக்கு முனையத்தை விரிவாக்கும் திட்டத்துக்கு, தம்முடன் இணைந்து செயற்படத்தக்க பொருத்தமானதொரு மூலோபாய முதலீட்டு நிறுவனத்தை, அடையாளம் காண உதவும் படி, சிறிலங்காவின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், கொழும்பில் உள்ள இந்தியத் தூதுரகத்திடம் கேட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுடெல்லியில் உள்ள இந்தியாவின் கப்பல்துறை அமைச்சுக்கு, இந்தியத் தூதரகம் கடிதம் அனுப்பியுள்ளது.

இந்தியாவின் சரக்குகளைப் பரிமாற்றும் முக்கியமான மையமாக கொழும்புத் துறைமுகம் இருப்பதால், இந்திய நிறுவனம் ஒன்று இதில் ஈடுபடுவது நன்மையளிப்பதாக இருக்கும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம், கொழும்புத் துறைமுகத்தில் தெற்கு, கிழக்கு, மேற்கு முனையங்கள் என்று மூன்று கொள்கனல் முனையங்களை அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதில் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டம், சிறிலங்கா துறைமுக அதிகாரசபையால் நிர்வகிக்கப்படும் வகையில், 330 மில்லியன் டொலர் செலவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

1200 மீற்றர் நீளமுடைய, இந்த கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தின், 400 மீற்றர் வரையான பகுதி, கட்டுமானப் பணிகள் முடிந்து, கடந்த ஏப்ரல் மாதம் திறந்து வைக்கப்பட்டது.

இதற்கு, ஆசிய அபிவிருத்தி வங்கி, 81.7 வீதமும், சிறிலங்கா துறைமுக அதிகாரசபை 18.3 வீதமும் நிதியை ஒதுக்கியுள்ளன.

இந்த கொள்கலன் முனையத்துக்கு, முனையத்தில் கப்பல்களை ஈர்க்கத்தக்க, அபிவிருத்தி செய்து செயற்படுத்தும் ஒரு செயற்பாட்டாளரை சிறிலங்கா துறைமுக அதிகாரசபை ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, கொழும்புத் துறைமுகத்தின் தெற்கு கொள்கலன் முனையம், ஏற்கனவே செயற்படத் தொடங்கி விட்டது.

சீன மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் இன்ரநசனல் நிறுவனம் 85 வீதமும், சிறிலங்கா துறைமுக அதிகாரசபை 15 வீதமும், இந்த முனையத்தில் முதலிட்டுள்ளன.

இந்த முனையத்தை கட்டி, செயற்படுத்தி, 35 ஆண்டுகளில் கைமாற்றும் உடன்பாட்டை சீன நிறுவனம், சிறிலங்கா துறைமுக அதிகாரசபையுடன் செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *