மேலும்

இழுபறியில் 2ஆவது சீன – சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் – அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு

Srilanka-chinaஇரண்டாவது சீன – சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்புக் கலந்துரையாடல், அடுத்த ஆண்டின் முன் அரையாண்டு பகுதியிலேயே இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாவது சீன – சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல், 2014ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் பீஜிங்கில் இடம்பெற்றது.

ஆண்டுதோறும் நடத்த திட்டமிடப்பட்ட இந்தப் பாதுகாப்பு ஒத்துழைப்புக் கலந்துரையாடலின், இரண்டாவது கூட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் சிறிலங்காவில் நடத்துவது என இணக்கம் காணப்பட்டிருந்தது.

கடந்த மே மாதம், சிங்கப்பூரில் நடந்த சங்கிரி-லா பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்கச் சென்றிருந்த சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரதி பொது தலைமை அதிகாரி அட்மிரல் சன் ஜியான்குவோவுடன் நடத்திய பேச்சுக்களின் போதும், இந்த ஆண்டு இறுதியில் இந்த பாதுகாப்புக் கருத்தரங்கை நடத்த இணக்கம் காணப்பட்டது.

அத்துடன், சிறிலங்காவில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறும், சீன குழுவுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவினால் அழைப்பு விடுக்கப்பட்டது.

எனினும், இந்தப் பாதுகாப்பு மாநாட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தும் ஒழுங்குகளில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இழுபறிகளே காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், அண்மையில், சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, இந்தப் பாதுகாப்புக் கலந்துரையாடலை அடுத்த ஆண்டு முதல் அரையாண்டுப் பகுதிக்குள் நடத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருக்கிறார்.

ஜியான்ஷான் அமைப்பின் 6ஆவது கூட்டம் கடந்த 16ஆம் நாளில் இருந்து 18ஆம் நாள் வரை பீஜிங்கில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்குச் சென்றிருந்த போதே, சீன- சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்புக் கலந்துரையாடலுக்கான ஒழுங்குகளை  மேற்கொள்வது குறித்து, சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரதி பொது தலைமை அதிகாரி அட்மிரல் சன் ஜியான்குவோவுடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி பேச்சுக்களை நடடத்தியுள்ளார்.

இதன்போது, அடுத்த ஆண்டு முதல் அரையாண்டுக்குள் இந்தக் கூட்டத்தை நடத்த சீனத் தரப்பு இணங்கியுள்ள போதிலும், இந்தக் கூட்டம் நடக்கவுள்ள சரியான காலப்பகுதி இன்னமும் முடிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இந்தச் சந்திப்பின் போது, பயிற்சி, பாதுகாப்புப் படைப் பிரதிநிதிகளைப் பரிமாற்றம் செய்து கொள்ளல், கல்வி பயிற்சிநெறிகள், கருத்தரங்குகளிலும் பயிற்சிப் பட்டறைகளிலும் பங்கேற்றல், தொடர்பாகவும் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *