மேலும்

போரின் கடைசி 12 மணித்தியாலங்களில் புலிகளாலேயே அதிக பொதுமக்கள் கொல்லப்பட்டனராம்

war crimeபோரின் கடைசி 12மணி நேரத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அதிகளவான உயிரிழப்புக்களுக்கு, விடுதலைப் புலிகளே காரணம் என்று, மக்ஸ்வெல் பரணகம  ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில், போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த  மதிப்புக்குரிய தொண்டர் நிறுவனமொன்று, இறுதிக்கட்ட ப் போரின் கடைசி 12மணித்தியாலங்களில்,  விடுதலைப் புலிகளாலேயே  பொதுமக்களுக்கு அதிகளவான இழப்புக்கள் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, ஐ.நா பொதுச்செயலர் நியமித்த தருஸ்மன் தலைமையிலான நிபுணர் குழுவின் அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளதைப் போன்று, 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இனஅழிப்புச் செய்யும் நோக்கில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிறிலங்கா இராணுவத்தினரால் பொதுமக்கள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டனர்  என்ற குற்றச்சாட்டையும் பரணகம  ஆணைக்குழுவின் அறிக்கை நிராகரித்துள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் 3 இலட்சம் முதல் 3 இலட்சத்து 30ஆயிரம் வரையிலான தமிழ் மக்கள் போரில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அத்துடன் மக்கள் மனித கேடயங்களாகவும் புலிகள் அவர்களைப் பயன்படுத்தினர். அவர்களை பயணக்கைதிகளாக பயன்படுத்தி பதுங்கு குழிகளையும் தோண்டும் செயற்பாடுகளிலும் ஈடுபடுத்தினர்.

சிறுவர்களை போர்க்களத்தின் முன்னரங்கங்களில் போரிடுவதற்காக பயன்படுத்தினர்.

மக்களை தம்முடன் வைத்து விடுதலைப்புலிகளின் தலைமையின் பலத்தை பாதுகாக்க முயன்றனர்.

பெருமளவு பொதுமக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன. இதனால் பல்வேறு உயிரிழப்புக்கள் ஏற்பட்டன.

புலிகளின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்ட பொதுமக்கள்.  இறுதி நேரத்தில் தப்பிக்க முயன்றபோது அவர்கள் உயிரிழந்தனர்.

அவர்கள் சிறிலங்கா இராணுவத்தினர் வீசிய ஷெல்களால் உயிரிழந்ததாக ஊடகங்களில் பரப்புரை செய்யப்பட்டது. வெளிநாடுகளின் தலையீடுகளை ஏற்படுத்துவதற்காகவும் இதனைப் பயன்படுத்தினர்.

பொதுமக்களை கொலை செய்வதற்காக தற்கொலைகுண்டுதாரிகள், நிலக்கண்ணிவெடிகள் மற்றும் ஏனைய வெடிபொருள் சாதனங்களைப் புலிகள் பயன்படுத்தினர்.  இதனால் பெருமளவிலான பொதுமக்கள் உயிரிழந்தனர்.

ஆயுதம் தரித்தவர்கள் சிவில் உடையை அணிந்திருந்தார்கள். அவர்களின் உயிரிழப்புக்களும் பொதுமக்களின் இறப்புக்களாக காண்பிக்கப்பட்டுள்ளது என்றும் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் காரணங்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியமையாலேயே அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழு கண்டறிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, சிறிலங்கா இலங்கை இராணுவத்தினரின் பீரங்கித் தாக்குதல்களில் குறிப்பிடத்தக்களவு பொதுமக்கள் இறந்துள்ளார்கள் என்பதை ஆணைகுழு ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆனாலும்,  பொதுமக்களை தமது கட்டுப்பாட்டிலிருந்து செல்வதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிகாதமையினால் தான், இவ்வாறான தவிர்க்க முடியாததொரு விளைவு ஏற்பட்டுள்ளது என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *