மேலும்

சிங்கக்கொடி ஏந்தி சிங்கள நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் – மகிந்த அணி சூளுரை

dinesh-vasu-udaya-wimalமீண்டும் சிங்கக்கொடிகளை ஏந்தி சிங்கள பெளத்த நாட்டைக் காப்பாற்ற அனைத்து சிங்களவர்களும் முன்வரவேண்டும், இந்த நாட்டை சிங்கள நாடாகவே கட்டியெழுப்ப வேண்டும் என்று, கொழும்பில் நேற்று நடத்திய கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியினர் சூளுரைத்துள்ளனர்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக, மகிந்த ஆதரவு அணியினர் நேற்று கொழும்பு விகாரமகாதேவி பூங்கா திறந்தவெளி  பாரிய கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியைச் சேர்ந்த, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, தினேஸ் குணவர்த்தன,வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, டியூ.குணசேகர உள்ளிட்டோர் ஒழுங்கு செய்திருந்த இந்தக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த நாமல் ராஜபக்ச, டலஸ் அழகப்பெரும, காமினி லொக்குகே, கீதா குமாரசிங்க உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில-

udaya gammanpilaபோரில் தமிழ் மக்களை கொன்று குவித்ததாக எமது இராணுவ வீரர்கள் மீது குற்றம் சுமத்தியே எம்மை அனைத்துலக நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முயற்சித்தனர். அந்த முயற்சியை எமது அரசாங்கம் தோற்கடித்தது.

ஆனால் இந்த அரசாங்கம் அனைத்துலக விசாரணைக்கு ஆதரவு தெரிவித்து எமது இராணுவமே குற்றவாளிகள் என்பதை உறுதிப்படுத்திவிட்டது.

அதேபோல் சிறிலங்கா தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள தீர்மானம் எமது நாட்டுக்கு மிகவும் மோசமானதொன்று.

இப்போது நாட்டுக்கு எதிராக எழுந்துள்ள அனைத்துலக அழுத்தங்களை புதிய அரசாங்கம் எவ்வாறு கையாள்கின்றது என்பதில் பாரிய சிக்கல் நிலைமைகள் எழுந்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த தீர்மான வரைபை சிறிலங்கா ஏற்றுக்கொண்டதில் இருந்தே இந்த அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகள் என்னவென்பது தெளிவாகியுள்ளது.

ஆனால் இந்த தீர்மானத்தின் மூலமாக மேற்கொள்ளவுள்ள விசாரணை முறைமையை உள்ளக பொறிமுறை என அரசாங்கம் கூறுகிறது. எனினும் இந்த விசாரணை முழுமையான அனைத்துலக விசாரணை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

ஆகவே இப்போது சிறிலங்கா மீது மேற்கொள்ளவுள்ள விசாரணை முறைமை எவ்வாறானது என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.

சிறிலங்காவில் ஒரு விசாரணை நடக்குமாயின் அது உள்ளக விசாரணை என குறிப்பிட முடியும். அதேபோல் அனைத்துலக தலையீட்டில் நடக்குமாயின் அதை அனைத்துலக விசாரணை என்றே குறிப்பிட முடியும்.

இப்பொது நடக்கவிருப்பது இந்த இரண்டு விசாரணைகளின் கலவையாகும். இந்த விசாரணையானது அனைத்துலகத்தை சார்ந்த வகையிலேயே அமைந்துள்ளது.

இந்த முறைமை மூலமாக எமது இராணுவ வீரர்களை தண்டிக்கும் வகையில் பலமான ஒரு விசாரணையை இந்த அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.

அரசாங்கம் தமது ஆட்சியை தக்கவைக்கும் நோக்கத்தில் எமது இராணுவத்தை காட்டிக்கொடுத்து விட்டது. இராணுவத்தை காட்டிக்கொடுத்தும் மக்களிடம் பொய்களைக் கூறியும் ஆட்சியை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆகவே தொடர்ந்தும் பொய்களைக் கூறி தப்பிக்க முடியாது. வெகு விரைவில் உண்மைகள் வெளிவரும் என அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன-

Dinesh-Gunawardanaஐ.நாவின் பரிந்துரைக்கு அமைய சிறிலங்காவில் நடைபெறவிருப்பது உள்ளக விசாரணைகள் அல்ல. மாறாக அனைத்துலக விசாரணையேயாகும்.

ஐ.நா பரிந்துரையில் கலப்பு நீதிமன்ற முறையில் விசாரணைகளை நடத்துவதென்பது இறுதியில் முழுமையான அனைத்துலக விசாரணையாகவே அமையும்.

இந்த செயற்பாடுகளின் மூலமாக அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் ஆக்கிரமிப்பில் சிறிலங்காவில் உள்ள வளங்களையும், பொருளாதார தன்மைகளையும் சூறையாடும் முயற்சியும் உள்ளது.

இந்த நாட்டில் ஏதேனும் விசாரணைகளை முன்னெடுப்பதாயின் அதை சிறிலங்காவின் அமைப்புக்கள் மூலமாகவும் சிறிலங்காவின் அதிகாரத்தற்கு உட்பட்ட வகையிலுமே மேற்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நாட்டில் வாழும் அனைவருக்கும் உள்ளது. இதில் மத, மொழி, இன பேதம் இருத்தலாகாது.

இந்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மேற்குலக வாதிகளின் காலில் விழவேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் இந்த அரசாங்கம் தம்மை காப்பாற்றிக்கொள்ள அனைத்துலக நாடுகளின் காலில் விழுகின்றது. சிறிலங்காவில் அவர்களின் செயற்பாடுகளை மேற்கொள்ள இடமளித்து விட்டு தமது தலைகளை இவர்கள் பாதுகாத்துக் கொள்கின்றனர்.

இந்த செயற்பாடுகளினால் நாட்டு மக்களும் இந்த நாட்டின் பாதுகாப்பு படையினருமே பாதிக்கப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த  லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண-

tissa vitharanaதேசிய அரசாங்கம் நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தரும் என சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தெரிவித்துள்ளனர்.

இரண்டு வருடங்களில் நாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக இவர்கள் தெரிவித்தனர். ஆனால் இன்றுவரை நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலோ அல்லது நாட்டில் சுயாதீன செயற்பாடுகளை பலப்படுத்தும் வகையிலோ செயற்படவில்லை.

மாறாக மேற்கத்தேய நாடுகளின் கொள்கையை பரப்பும் வகையிலும் மேற்கு வாதிகளின் அடிமைகளாக இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் மாற்றியமைக்கும் செயற்பாடுகளையே இந்த அரசாங்கம் மேற்கொள்கிறது.

மேலும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் தீர்மானம் வெளிவந்துள்ளது. இதில் ஐ.நாசபையின் பரிந்துரையிலான விசாரணை குழுவை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் எமக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சிறிலங்காவில் குற்றங்கள் நடந்துள்ளன என சந்தேகம் இருக்குமாயின் அதை உள்ளக விசாரணைகள் மூலம் தீர்க்க வேண்டும்.

சிறிலங்காவில் புகழ்வாய்ந்த நிபுணத்துவம் மிக்க சிறந்த நீதிபதிகள் உள்ளனர். சிறந்த சட்டத்தரணிகள் உள்ளனர். ஆய்வாளர்கள் உள்ளனர். இவர்கள் இன்று அனைத்துலக மட்டத்தில் புகழ்பெற்று விளங்குகின்றனர்.

பல நாடுகளின் சட்டரீதியான செயற்பாடுகளில் சிறிலங்காவின் சட்ட வல்லுனர்களின் உதவிகளை நாடுகின்றன. அவ்வாறான நிலையில் போர்க்குற்றச் சாட்டுகளில் சிறிலங்கா இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா நீதிமன்றங்களின் மூலமாக கண்டறிய வேண்டும்.

எக்காரணத்தை கொண்டும் சிறிலங்காவின் பிரச்சினைகளை அனைத்துலகம் கையாள இடமளிக்கக் கூடாது. அனைத்துலகத்தின் தலையீடு உள்ளதெனின் உடனடியாக அதை தடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

ஆனால் அதை அரசாங்கம் செய்யாது மேற்குலக சர்வாதிகாரிகளின் தலையீட்டில் சிறிலங்காவில் தீர்வு காணவே இவர்கள் முயற்சிக்கின்றனர் என குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச-

vimal-weerawansaசிறிலங்காவில் மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற போரில் புலிகளினால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள், விரட்டியடிக்கப்பட முஸ்லிம் மக்கள், படுகொலை செய்யப்பட்ட சிங்கள மக்களின் இறப்புகளுக்கு காரணம் கேட்காத அனைத்துலக சமூகம் புலிகளின் இறப்பிற்கு மாத்திரம் காரணம் கேட்கின்றது.

அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் புலி ஆதரவாளர்களுக்காகவே இன்று போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க முயல்கின்றன.

அதேபோல் நாட்டை காப்பாற்றிய இராணுவத்தை சிறைகளில் அடைத்து புலிகளை விடுதலை செய்யும் தீர்மானத்துக்கு இந்த அரசாங்கம் வந்துள்ளது.

கைது செய்யப்பட புலிகளை தண்டிக்காத வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தையும் நீக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.

அதேபோல் போர்க்குற்றச்சாட்டுகள் என்ற பெயரில் இவர்கள் முயற்சிப்பது வெறுமனே விசாரணைகளை செய்வது அல்ல. அதையும் தாண்டி நாட்டில் பிரிவினையை உருவாக்கவே இவர்கள் முயற்சிக்கின்றனர்.

வடக்கிற்கு தேவையான அனைத்தையும் பெற்றுக்கொண்டுத்து வடக்குக் கிழக்கை ஒன்றிணைந்த மாகாணமாக மாற்றி அவர்களுக்கான பொலிஸ், காணி அதிகாரங்களை கொடுப்பதன் மூலமும், வடமாகாண சபையின் கீழான அதிகாரங்களை பலப்படுத்தி விடுதலை செய்யப்போகும் புலிகளை வடக்கின் பொலிஸாக மாற்றி இறுதியில் புலிகளின் பாதுகாப்பின் கீழான தனி ஈழத்தினையே அமைக்க முயற்சிக்கின்றனர்.

அன்று வன்னியில் ஆரம்பித்த போராட்டம் ஜெனிவாவில் பலப்படுத்தப்பட்டு அமெரிக்காவின் ஆதரவுடன் மீண்டும் நாட்டில் பலமடையும் வேலையே இப்போது நடைபெற்றுள்ளது. இதற்கான முழுமையான ஆதரவை இந்த அரசாங்கம் வழங்கி வருகின்றது.

ஆகவே இப்போதும் சிங்கள பௌத்த மக்கள் அமைதியாக இருந்தால் இந்த நாட்டை கட்டிக்காப்பாற்ற முடியாது.

அன்று போர் முடிவடைந்தவுடன் சிங்கள மக்கள் சிங்கக்கொடிகளை ஏந்தி இந்த நாட்டை எவ்வாறு பாதுகாத்தனரோ அதேபோல் மீண்டும் சிங்கக்கொடிகளை ஏந்தி சிங்கள பெளத்த நாட்டை காப்பாற்ற அனைத்து சிங்களவர்களும் முன்வரவேண்டும்.

இந்த நாட்டை சிங்கள நாடாகவே பாதுகாத்து எமது இராணுவ வீரர்களையும் எமது மக்களையும் பாதுகாக்க வேண்டும் . சிங்கள நாட்டை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *