மேலும்

பிரகீத் கடத்தல் வழக்கில் சிறிலங்கா இராணுவத் தளபதியும் விசாரணைக்கு அழைப்பு

prageeth eknaligodaகாணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தக் கோரி, அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தாக்கல் செய்திருந்த வழக்கில், பிரதிவாதிகளாக சிறிலங்கா இராணுவத் தளபதியையும் இராணுவ புலனாய்வுப் பிரிவுத் தளபதியை சேர்ப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமது வேண்டுகோளை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக சந்தியா எக்னெலிகொட தெரிவித்தார்.

பிரகீத் எக்னெலிகொட தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, அவர் காணாமற்போன சம்பவத்துடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவு தொடர்புபட்டுள்ளதாக அறியமுடிவதாகவும், அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இராணுவத் தளபதியையும் புலனாய்வுப் பிரிவுத் தலைவரையும் பிரதிவாதிகளாக சேர்ப்பதற்கு அனுமதி அளிக்குமாறும், மனுதாரர் தரப்பு சட்டவாளர்  நீதிமன்றத்தைக் கேட்டிருந்தார்.

அந்த வேண்டுகோளை ஏற்ற நீதிபதிகள் சிறிலங்கா இராணுவத் தளபதி மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தளபதி ஆகியோரை மனுவில் பிரதிவாதிகளாக சேர்ப்பதற்கு அனுமதி வழங்கினார்.

இதன்படி, எதிர்வரும் 30 நாள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு சிறிலங்கா  இராணுவ தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கும், இராணுவப் புலனாய்வு பிரிவின் தளபதிக்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரி அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட 2010 ஆண்டு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *