மேலும்

சீன நீர்மூழ்கிகள் கொழும்பு வருவதற்கு பச்சைக்கொடி காட்டுகிறார் ரணில்

ranilசீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளினதும், கடற்படைக் கப்பல்கள், நீர்மூழ்கிகள் சிறிலங்காவுக்கு வருவதற்கு எந்த தடையும் இல்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூருக்குச் சென்றிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்த நாட்டில் இருந்து வெளியாகும், Straits Times நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தச் செவ்வியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது.

கேள்வி:சிங்கப்பூர் பயணம் குறித்து?

பதில்: நான் சிங்கப்பூர் பிரதமரை சந்தித்து பேச்சு நடத்தினேன். பிரதி பிரதமர் சண்முகரத்தினத்தையும் சந்தித்து பேச்சு நடத்தினேன். அத்துடன் வெளிவிவகார,  நிதி, வர்த்தக அமைச்சர்களையும் சந்தித்தேன்.

கேள்வி: சந்திப்பின் விளைவுகள் எவ்வாறு உள்ளன?

பதில்: ஒத்துழைப்புடன் செயற்படக்கூடிய துறைகள் தொடர்பாக நாம் பேச்சு நடத்தினோம். சிறிலங்காவின் மேல்மாகாணத்தை மெகா பொலிஸ் நகரமாக மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான திட்டமிடலை 2004 ஆம் ஆண்டு சிங்கப்பூர் நிறுவனம் செய்தது. ஆனால் அது தொடரப்படவில்லை. தற்போது அதனை மீண்டும் செய்யவிருக்கிறோம்.

திருகோணமலையிலும் இவ்வாறு திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம். ஏற்கனவே ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இந்தப் பிராந்தியத்தில் அக்கறை கொண்டுள்ளன. திருகோணமலை துறைமுகத்தைவிட அங்கு மின் உற்பத்தி செய்வதற்குச் சாத்தியமுள்ளது. இந்தியாவும் ஜப்பானும் இதில் ஆர்வம் கொண்டுள்ளன.

கேள்வி: பிரதமராக உங்களின் முதன்மை நோக்கம் என்ன?

பதில்: நல்லிணக்கமே எனது முதன்மை நோக்கம். இதுதான் முன்னுரிமை விடயம். அத்துடன் ராஜபக்ச காலத்தில் வீழ்ச்சிகண்ட ஜனநாயக நிறுவனங்களை மீண்டும் பலப்படுத்த வேண்டும். உதாரணமாக முன்னாள் பிரதம நீதியரசர் கடந்த அரசாங்கத்தில் அநாகரீகமாக துக்கி வீசப்பட்டார். சட்டத்தின் ஆட்சிப்படுத்தல் வீழ்ச்சி கண்டது. இவ்வாறு பல விடயங்கள் உள்ளன. ஆசியாவில் எமது ஜனாநாயம் மிகவும் பழமை வாய்ந்ததும் பெருமை வாய்ந்ததுமாகும்.

கேள்வி:மனித உரிமை மீறல் குறித்த ஐ.நாவின் அறிக்கை தொடர்பாக?

பதில்: நாங்கள் அது தொடர்பாக தற்போது கலந்துரையாடி வருகிறோம். சிறிலங்கா அதிபர் மைத்திரி பால சிறிசேன இந்த விடயம் குறித்து ஆராய அனைத்து கட்சி மாநாட்டை கூட்டியுள்ளார். காணாமல் போனோர் குறித்து பணியகம் ஒன்றை அமைக்கத் திட்டமிடுகிறோம். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை அமைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடுகிறோம்.

உண்மையைக்  கண்டறியும் ஆணைக்குழுவில் நட்டஈடு வழங்கும் சபையும் அமைக்கப்படும். அத்துடன் கருணை சபை ஒன்றும் அமைக்கப்படும். அந்த கருணை சபையானது மன்னிப்பு வழங்குவது குறித்து ஆராயும். விசாரணைக்கான நீதிமன்றக் கட்டமைப்பும் அமைக்கப்படும். இறுதி தீர்ப்பிற்காக உயர் நீதிமன்றம் நாடப்படும்.

கேள்வி: போர்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க ஏன் தயங்குகிறீர்கள்?

பதில்: வெளிநாட்டு நீதிபதிகளை பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் தயங்கவில்லை. ஆனால் அது எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து நாங்கள் தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே எமது விசாரணை மற்றும் ஆணைக்குழு செயற்பாடுகளில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற்றிருக்கின்றனர். இலங்கையில் இறுதியாக அமைக்கப்பட்ட இரண்டு ஆணைக்குழுக்களுக்கு வெளிநாட்டு நீதிபதிகள் ஆலேசனைகள் வழங்கியிருந்தனர். எனவே தற்போது கேள்வி என்னவென்றால் நாம் இந்த விடயத்தில் எந்த மட்டம் வரை செல்வது என்பதாகும்.

நீதிபதிகளை அமர்த்துவதா அல்லது எவ்வாறு பங்களிக்க செய்வது என்பது கேள்வியாகும். வெ ளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்பு என்பது இங்கு பிரச்சினை அல்ல. ஆனால் அவர்கள் ஆலோசகர்களாகவா அல்லது நீதிபதிகளாகவா வரப்போகின்றனர் என்பதே கேள்வியாகும்.

கேள்வி: இது தொடர்பான உங்களது தனிப்பட்ட நிலைப்பாடு என்ன ?

பதில்: சிறிலங்கா சட்டத்தரணிகள் சங்கமும் சிவில் சமூகமும் இது தொடர்பாக இவ்வாறு கருத்து வெளியிடுகின்றன என்று பார்ப்போம். பங்கேற்பு என்பது ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்பு எந்த வகையில் அமையும் என்பது கேள்வியாகும். அதாவது ஆலோசனை வழங்குவதற்கா அல்லது விசாரிப்பதற்கா என்பதே கேள்வியாகும். இதில் சில கருத்துக்கள் உள்ளன.

எவ்வாறெனினும் அதிகமான விடயங்கள் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு முன்னிலைக்கு செல்லும். அந்த ஆணைக்குழுவில் உள்ளவர்களே முக்கியமானவர்களாக இருப்பர். வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடனான நீதிமன்றக் கட்டமைப்பு சில விடயங்கள் குறித்து நிச்சயம் ஆராயும். ஆனால் அதிகமான விடயங்கள் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவிலேயே ஆராயப்படும்.

கேள்வி: போரின் இறுதி மாதத்தின் பாதிப்புக்கள் குறித்து ஏதாவது மதிப்பீடுகள்?

பதில்: யாருக்கும் தெரியாது. மனித உரிமை ஆணைக்குழுவினாலும் அதனை கூற முடியவில்லை. சரியான தொகை எங்கும் இல்லை. ஆனால் அது 40 ஆயிரத்துக்கும் குறைவானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

கேள்வி: வேறு கட்சியை சேர்ந்த சிறிலங்கா அதிபர் சிறிசேனவுடனான உறவு குறித்து?

பதில்: எவ்விதமான பிரச்சினையும் இல்லை. அனைத்து அமைச்சர்களையும் கொண்டு செயற்படுகின்றோம். இரண்டு பிரதான கட்சிகளையும் தவிர்த்து மேலும் பல சிறிய கட்சிகளும் உள்ளன.

கேள்வி: ராஜபக்ச விடயத்தில் மென்போக்கு கடைபிடிக்கப்படுகிறதா?

பதில்: என்ன நடந்தது என்பது குறித்த உண்மை மக்களுக்கு தெரியவேண்டும். தண்டனை என்பது வேறுபட்ட விடயம். ஆனால் உண்மை கண்டறியப்பட வேண்டும். சிலர் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டனர். ஒரு சகோதரரான பசில் ராஜபக்ச நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டு தற்போது பிணையில் உள்ளார்.

கேள்வி: சீனாவுடனான உறவு குறித்து?

பதில்: இந்த விடயத்தில் எமது கொள்கை என்ன என்பதை இந்தியாவுக்கு கூறியுள்ளோம். இன்னொரு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் யாரும் செயற்பட முடியாது. அதனை மனதில்கொண்டு எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

இந்து சமுத்திரத்திலான கடல் பாதுகாப்பில் நாங்கள் பங்கெடுத்துள்ளோம். சீனாவுடன் எமக்கு இராணுவ தொடர்புகள் இல்லை. ஆனால் மிகவும் வலுவான பொருளாதார உறவு காணப்படுகின்றது.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகால உறவு காணப்படுவதாக இந்தியாவுக்கு கூறியுள்ளோம். சீன பொருளாதார முதலீடுகள் சிறிலங்காவில் வரவேற்கப்படும். உட்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பாக சீனாவுடன் எமக்கு சில பிரச்சினைகள் காணப்பட்டன. அது சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இருதரப்பு விவகாரமாகும். அது இந்தியாவில் தாக்கம் செலுத்தவில்லை.

இந்தியா ஐ.நா பாதுகாப்புச் சபைக்குள் செல்வதற்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம். இந்தியாவை விட எமது பொருளாதார கொள்கைகள் திறந்த பண்பை கொண்டவை.

கேள்வி: இந்தியாவை சினம்கொள்ள செய்த சீன நீர்மூழ்கி கப்பல்களின் பயணம்?

பதில்: சிறிலங்காவுக்கு  வெளிநாட்டு கடற்படைக் கப்பல்கள்  வருவதற்கான அளவுகோல் ஒன்றை நாங்கள் வகுத்துள்ளோம். அதனடிப்படையில் நீர்மூழ்கிகள் உட்பட அனைத்து கடற்படைக் கப்பல்களும் சிறிலங்காவுக்கு வரலாம். எங்களை பொறுத்தவரை அது நட்புறவுப் பயணமாக இருந்தால், நாங்கள் அயல்நாட்டிற்கு அது குறித்து அறிவிப்போம். குறிப்பிட்ட கப்பல்கள் சிறிலங்காவுக்கு தொடர்ச்சியாக, அடிக்கடி வராதவகையில் நாங்கள் அட்டவணைகளை வகுப்போம்.

சீனாவின் நீர்மூழ்கிகள் உட்பட கடற்படைக் கப்பல்கள் இறுதியாக சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட வேளை அது குறித்து தனக்கு தெரிவிக்கப்படவில்லை என இந்தியா தெரிவிக்கிறது, இதுவே பிரச்சினைக்குரிய விடயம்.

நாங்கள் இது குறித்து ஆராய்ந்து பார்த்ததில் இது உண்மை என்றே தெரியவந்துள்ளது. சீனா தனது நீர்மூழ்கிகளின் பயணத்தை முன்கூட்டியே சிறிலங்காவுக்கு தெரிவித்துள்ளது. அவர்களது  நீர்மூழ்கிகள் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்து தரித்து விட்டு சென்று விட்டன.

ஜப்பானியப்  பிரதமர் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டவேளை இந்த சம்பவம் இடம்பெற்றது. எனவே அது பிரச்சினையாக மாறியது. தற்போது நாங்கள் எங்கள் அளவுகோல்களின் அடிப்படையில் செயற்படுவோம். நீங்கள் உங்கள் நீர்மூழ்கிகளையும் போர்க்கப்பல்களையும் சிறிலங்காவுக்கு அனுப்ப வேண்டும், சிங்கப்பூரிடம் சிறந்த போர்க்கப்பல்கள் உள்ளன.

வழிமூலம்- வீரகேசரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *