மேலும்

பிள்ளையான் மீதும் பயங்கரவாத தடைச்சட்டம் – 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கத் திட்டம்

Pillayanநாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறையினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட, பிள்ளையானின் முன்னாள் கூட்டாளிகளான பிரதீப் மாஸ்டர் மற்றும் கஜன் மாமா ஆகியோரை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 11ஆம் நாள் கைது செய்யப்பட்ட பிள்ளையானையும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரியுள்ளனர்.

தற்போது  பிள்ளையானை அடுத்த மாதம் 04ஆம் நாள் வரை தடுத்து வைத்து விசாரிக்க, கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.

இந்தநிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி விரைவில் கிடைக்கும் என்று நம்புவதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான குணசேகர தெரிவித்துள்ளார்.

Pillayan

அதேவேளை, பிள்ளையான் மீது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைகள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையானிடம், நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை குறித்தும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா இராணுவப் .புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கேணல் சம்மி குமாரரத்னவினால் பிள்ளையானுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியைப் பயன்படுத்தியே, ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் துறையினருக்குத் தெரியவந்துள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட நம்பவம் தொடர்பாக, கேணல் சம்மி குமாரரத்ன கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கேணல் சம்மி குமாரரத்னவினால் பிள்ளையானுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி, அவரால், சேரன் என்பவருக்கு வழங்கப்பட்டு, கடைசியாக, ரவிராஜ் படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்படும் சிறிலங்கா கடற்படையின் பெற்றி ஒவ்விசரான செனவியிடம் வழங்கப்பட்டிருக்கிறது.

எனவே, இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைகள் தொடர்பாகவும், பிள்ளையான் விசாரணைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்ற கொழும்பு வாரஇதழ் தெரிவித்துள்ளது.

மேலும், முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், பிள்ளையான் அணியினர், பல்வேறு படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்களில் ஈடுபட்டது பற்றிய தகவல்களையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளதாகவும், தெரியவந்துள்ளதாகவும், கொழும்பு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *