மேலும்

சீனக் கடற்படை கப்பல்கள் அனுமதி கோரினால் பரிசீலிப்போம் – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

chinese-submarineசீனக் கடற்படைக் கப்பல்கள் சிறிலங்காவுக்கு மீண்டும் வருவதற்கு அனுமதி கோரினால் அதுபற்றி ஆலோசிக்கப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில் அவர்,  எனினும், சீனாவிடம் இருந்து இன்னமும் அதற்கான கோரிக்கைகள் விடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கம், சீனாவுடன் நெருக்கமாக இருந்தது குறித்தும், சீன நீர்மூழ்கிகளை கொழும்பில் தரிக்க அனுமதித்தமை குறித்தும் இந்தியா கரிசனை கொண்டிருந்தது.

இந்த நிலையில்,கடந்த பெப்ரவரி மாதம் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்காலத்தில் சீன நீர்மூழ்கிகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார்.

எனினும், கடந்த மாதம் புதிதாகப் பதவியேற்றுள்ள சிறிலங்காவில் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, பீஜிங்கில் வைத்து ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு, அளித்துள்ள செவ்வியில், தற்போதைக்குத் திட்டங்கள் இல்லாவிட்டாலும் கூட, கடற்படைக் கப்பல்களை அழைப்பதற்கு, சீனாவிடம் இருந்து புதிய கோரிக்கைகள் விடுக்கப்பட்டால், அது குறித்து தீவிரமாகச் சிந்திக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் இன்னமும் எனது மேசைக்கு வரவில்லை.  அது வந்தால், அதனைக் கருத்தில் எடுத்துக் கொள்வேன்.  சரியான பாதையில் அது வந்தால், நாம் தீவிரமாக அதனைப் பரிசீலிப்போம் என்றும் அவர், பீஜிங்கில் நடக்கும் இராணுவ கருத்தரங்கு ஒன்றின் போது அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

”இதில் உண்மையான ஆர்வமும், பயனும் இருந்தால்,  சிலவேளைகளில் நாம் உலகம் முழுவதிலும் இருந்து போர்க்கலங்களுடன் கூட்டு நடவடிக்கைகளையும்,  பயிற்சிகளையும் மேற்கொள்வோம். அதில் பாகுபாடு இருக்காது.

சீனாவுடனான உறவுகளில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது.   இராணுவ உறவுகள் வலுவானதாக இருக்க வேண்டும்.

முன்னைய ஆட்சிக்காலத்தில் வெளிப்படைத்தன்மை குறித்த முறைப்பாடுகள் இருந்தன. ஆனால், நாங்கள் அதிகம் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாக நினைக்கிறேன். நேரம் வரும் போது, எமது உறவுகள் வலுவடையும்” எ ன்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *