மேலும்

போர்க்குற்றமிழைத்தவர்களை கதாநாயகர்களாக பாதுகாக்கக் கூடாது – ருக்கி பெர்னான்டோ

warcrimeபாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக சிறிலங்கா அரசாங்கமானது சிங்கள சமூகத்திடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கருத்துக்களையே முன்வைக்கிறது.

இவ்வாறு ucanews ஊடகத்துக்காக, மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்கா மீது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையானது கடந்த முதலாம் திகதியுடன் நான்கு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அதாவது சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதில் இறுதியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், சிறிலங்காவில் குற்றம் இழைத்தவர்கள் மீதான விசாரணையில் அனைத்துலக நீதிபதிகளை உள்வாங்குதல் தொடர்பில் ‘சமரச உடன்பாடு’ ஒன்று எட்டப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் அரசாங்கத்தால் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கைக்கான பதிலாகவே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

போரிலிருந்து மீண்டெழுந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்றோர் சிறிலங்காவில் என்ன நடந்தது என்பது தொடர்பாக ஐ.நா விசாரணையாளர்களிடம் தமது சாட்சியங்களைப் பதிவு செய்தனர். சிறிலங்கா அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் இவர்கள் தமது சாட்சியங்களை வழங்கினர்.

இவ்வாறான சாட்சியங்களுடன் ஐ.நாவால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சிறிலங்காவில் இடம்பெற்ற சட்ட ரீதியற்ற படுகொலைகள், காணாமற்போதல்கள், பலவந்தமான கைதுகள், சித்திரவதைகள், பாலியல் மற்றும் அது சார்ந்த வன்முறைகள், கட்டாய சிறுவர் ஆட்சேர்ப்புக்கள், போர் வலயங்களிலிருந்து தப்பிக்க முயற்சித்த மக்கள் தடுக்கப்பட்டமை, பொதுமக்கள், வைத்தியசாலைகள், உணவுத் தொடரணிகள், தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் திட்டமிடப்பட்டு இழைக்கப்பட்ட குற்றங்கள் எனவும், இவை சட்டத்தின் முன் நிரூபிக்கப்பட்டால் இவை மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் என தீர்ப்பளிக்கப்பட்டு இவற்றைப் புரிந்த சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தமிழ்ப் புலிகளுக்கு எதிராக தண்டனை வழங்கப்பட முடியும் எனவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வதற்கான தகைமையை சிறிலங்காவின் சட்ட மற்றும் நீதிச் சேவைகள் கொண்டிருக்கவில்லை எனவும் இதனாலேயே இவ்வாறான குற்றங்கள் தொடர்ந்தும் சிறிலங்காவில் இடம்பெறுவதாகவும் ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அனைத்துலக நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்கள் சிறிலங்காவின் நீதித்துறையுடன் இணைந்து ‘கலப்பு நீதிமன்றம்’ என்ற பொறிமுறையில் இவ்வாறான குற்றங்களை விசாரணை செய்யவேண்டும் எனவும் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் அடையாளங் காணப்பட்டது போன்று சிறிலங்கா மீதான ஐ.நா தீர்மானமானது மிகவும் தீவிரம் மிக்கதாக அமையவில்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் அரசியல், கருத்தியல் நலன்களைக் கருத்திற் கொண்டே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 19 ஆண்டுகளுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இம்மாதம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இது நீக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு சில நாட்களின் முன்னர், சிறிலங்காவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண் ஒருவர் குற்றமற்றவர் என உள்நாட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்ணிடம் சிறிலங்காவின் நீதிச்சேவையானது எவ்வித மன்னிப்பும் கோரவில்லை. அத்துடன் இவருக்கு எவ்வித நட்டஈடும் வழங்கப்படவில்லை.

இதேபோன்று சிறிலங்காவில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் அண்மையில் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். தமது வழக்குகளைப் பரிசீலிக்க வேண்டும் என இவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தே இவ்வாறான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். ஆனால் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இதேபோன்று எனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணையும் தொடர்கின்றது. இது எனது கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கின்றது. என் மீதான விசாரணையால் நான் எனது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனது வேலைத் தளத்திலிருந்து அபகரிக்கப்பட்ட உபகரணங்கள் இன்னமும் என்னிடம் திருப்பித்  தரப்படவில்லை.

அண்மையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது, ஐ.நா தீர்மானத்தில் பொதுமக்களின் செயற்பாடுகளில் சிறிலங்கா இராணுவத்தின் தலையீடு காணப்படக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இவ்வாறான தலையீடுகள் குறைக்கப்பட்டதற்கான எவ்வித சமிக்கையையும் நான் காணவில்லை.

இராணுவத்தினர் தற்போதும் பண்ணைகள், வர்த்தக நிலையங்கள், உணவகங்கள், விடுதிகள் மற்றும் முன்பள்ளிகளை நடத்துகின்றனர். 2006ல் எறிகணை வீச்சால் அழிக்கப்பட்ட அல்லைப்பிட்டியிலுள்ள தேவாலயத்தை வழிபடுவதற்காக நான் யாழ்ப்பாணத்திலிருந்து பயணம் செய்த போது, காவற்துறையினர் மற்றும் இராணுவ வீரர்களால் வழிமறிக்கப்பட்டேன்.

இவர்கள் என்னிடம் நான் எங்கு செல்கின்றேன், என்ன காரணத்திற்காக செல்கின்றேன் என்பதை விசாரித்தனர். ஆகவே ஐ.நா தீர்மானத்தின் பின்னரும் கூட இவ்வாறான சூழல் மாறவில்லை என்பதை நான் கண்டறிந்தேன்.

சிறிலங்கா அரசாங்கத்தால் வாக்குறுதி வழங்கப்பட்ட கலப்பு நீதிப்பொறிமுறையானது அடிப்படையில் நன்மை பயக்கக் கூடியது. ஆனால் அதன் விபரங்கள் தீங்கு விளைவிப்பதாக அமையலாம்.

இவ்வாறான பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு யார் எவ்வாறு நியமிக்கப்படுவார்கள்? இவர்களது விஞ்ஞாபனம் மற்றும் அவர்களது செயற்பாடுகள் எவ்வாறானதாக இருக்கும்? இவ்வாறான வினாக்களுக்கான பதில்களே தீர்மானம் வெற்றியடைவதற்கும் தோல்வியுறுவதற்கும் முக்கிய காரணிகளாக அமையும்.

சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ள போதிலும், போரால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு பொறுப்புக்கூறுவதற்கான நடவடிக்கைகளை இன்னமும் முன்னெடுக்கவில்லை.

தமிழ்ப் புலிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றங்களை விசாரணை செய்வது வரவேற்கத்தக்கதே. ஆனாலும் சிறிலங்கா அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ள முன்னாள் புலி உறுப்பினர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

15 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலை தொடர்பாவும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட இரு வேறு சம்பவங்கள் தொடர்பாகவும் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட தீர்ப்பானது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பிக்கை ஒளியைத் தோற்றுவித்துள்ளது.

இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் சிங்கள கேலிச்சித்திர வடிவமைப்பாளர் ஒருவர் கடத்தப்பட்டமை தொடர்பாக இராணுவ வீரர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இவை ஏனைய வழக்குகளைப் போலவே விசாரணை செய்யப்பட வேண்டும்.  ஆகவே எவ்வித பாரபட்சமும் பாராது குற்றமிழைத்தவர்கள் எவரேனும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

சிறிலங்கா இராணுவத்தால் இழைக்கப்பட்ட மிக மோசமான மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமானது அமைதி காக்கிறது. ஏனெனில் பெரும்பான்மை சிங்கள மக்களின் எதிர்ப்பிற்கு ஆளாகாமல் இருப்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

குறிப்பாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக சிறிலங்கா அரசாங்கமானது சிங்கள சமூகத்திடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கருத்துக்களை முன்வைக்கிறது.

சிறிலங்கா அரசாங்கமானது எது சரி எது பிழை என ஆராய்ந்து, தனக்கேயுரிய அரசியல் தார்மீகங்களைக் கருத்திற் கொண்டு, தைரியத்துடன் தனது கோட்பாடுகளை முன்வைக்கத் தவறியுள்ளது.

ஊடகங்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் மதத் தலைவர்கள் போன்றோர் அனைத்துலக தலையீட்டுடன் கூடிய நீதி விசாரணைப் பொறிமுறை அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தும் அதேவேளையில், காணாமற்போனோர், கடத்தப்பட்டோர் தொடர்பாகவும், நாட்டின் உண்மை மற்றும் மீளிணக்கப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போரிலிருந்து தப்பி வாழும் குடும்பத்தினருக்கும் நன்மையைப் பெற்றுத் தரக்கூடிய பொறிமுறை தொடர்பில் மிகக் குறைந்தளவிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளின் நிலையை பாதிக்கப்பட்ட சமூகத்தினர் எடுத்துக்கூறக் கூடிய முயற்சிகளை தேவாலயங்களும் மதத் தலைவர்களும் முன்னெடுக்க வேண்டும். இவ்வாறான பொறுப்புள்ள நிர்வாகங்கள் தொடர்ந்தும் அமைதி காக்காது தமது சமூகங்களின் பாதிப்புக்களை எடுத்துரைக்க வேண்டும்.

அத்துடன் போர்க் குற்றங்கள் இழைத்தவர்களை ‘போர்க் கதாநாயகர்கள்’ ‘மாவீரர்கள்’ எனக் கூறி அவர்களைப் பாதுகாக்காது உண்மையில் குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்வரவேண்டும்.

இவ்வாறான மக்கள் பிரதிநிதிகள் நாட்டில் உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் போன்றவற்றை வலியுறுத்த வேண்டும். இவையே நாட்டில் மீளிணக்கப்பாடு மற்றும் இலங்கையர்கள் தற்போது சந்திக்கும் பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாது தடுத்தல் போன்றவற்றுக்கு உத்தரவாதமளிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *