மேலும்

மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் அகழ்வுக்கு புதிய கேள்விப்பத்திரம்

mannar_basinமன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அரசாங்கம் புதிய கேள்விப்பத்திரங்களைக் கோரவுள்ளது.

மன்னார் கடற்படுக்கையில், எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்வதற்கான உரிமத்தைப் பெற்றிருந்த, கெய்ன் இந்தியா நிறுவனம், இம்மாதத்துடன் சிறிலங்காவில் இருந்து வெளியேறவுள்ளது.

இந்த நிறுவனம் நான்கு கிணறுகளைத் தோண்டிய போது, எண்ணெய் வளம் ஏதும் கண்டறியப்படவில்லை. அதேவேளை, இரண்டு கிணறுகளில் மாத்திரம், எரிவாயு படிமங்கள் கண்டறியப்பட்டன.

எனினும், அவற்றில் இருந்து வர்த்தக ரீதியான எரிவாயு உற்பத்தி செய்வது சாத்தியமில்லை என்று கண்டறியப்பட்ட நிலையிலேயே, கெய்ன் இந்தியா நிறுவனம் சிறிலங்காவில் தமது செயற்பாடுகளை முடித்துக் கொண்டு வெளியேறவுள்ளது.

இது தொடர்பாக கெய்ன் இந்தியா நிறுவனத்துக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, கெய்ன் இந்தியா நிறுவனம் மேற்கொண்ட 300 மில்லியன் டொலர் பெறுமதியான- நில அதிர்வு ஆய்வு அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் வைத்துக் கொள்ளும்.

இதற்குப் பதிலாக, கெய்ன் இந்தியா நிறுவனம், இந்தப் பணியில் இருந்து இடையில் விலகிக் கொள்வதற்கு, சிறிலங்கா அரசாங்கம் அபராதம் எதையும் விதிக்காது என்று இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, சிறிலங்கா அரசாங்கம் மன்னார் கடற்படுக்கையில் உள்ள, எண்ணெய் படிமத் துண்டங்களை விற்க, அனைத்துலக அளவில் கேள்விப் பத்திரம் கோரவுள்ளதாக, சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

கெய்ன் இந்தியா நிறுவனம் இதிலிருந்து வெளியேறுகின்ற போதிலும், அரசாங்கத்துக்கு இழப்பு இல்லை. அவர்கள் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை எம்மிடம் உள்ளது,

அந்த சாதகத்தன்மையை வைத்து, அனைத்துலக அளவில் புதிய கேள்விப் பத்திரங்கள் கோரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *