மேலும்

விசாரணைகளில் அனைத்துலக நிபுணர்கள் பங்கேற்பது சிறிலங்காவுக்கு புதிதல்ல – சட்டநிபுணர் வெலியமுன

Weliamunaஉள்ளக விசாரணைப் பொறிமுறையில் அனைத்துலக நிபுணர்கள் பங்கேற்றால், அதனை நம்பகரமாக முறையில் முன்னெடுக்க முடியும், என்றும் இது சிறிலங்காவுக்கு புதிய விடயமல்ல எனவும், சிறிலங்காவின் மூத்த  சட்டவாளர்களில் ஒருவரான ஜே.சி.வெலியமுன தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற, ஜெனிவா தீர்மானம் தொடர்பாக தெளிவுபடுத்தும் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“இறுதிப் போர்க் காலப்பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா குறித்த மூன்று தீர்மானங்கள் இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்டிருந்தன.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் ஆகியோரினால் வெளியிடப்பட்ட கூட்டு பிரகடனத்தின் பின்னரே அனைத்துலக அழுத்தம் சிறிலங்கா மீது அதிகரிக்கத் தொடங்கியது.

அனைத்துலக சமூகத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை சரிவர நிறைவேற்றாமையே இத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதற்குப் பிரதான காரணம்.

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தென்னிலங்கையில் பல்வேறு மனித உரிமை மீறல் இடம்பெற்றன.

ஊடகவியலாளர்களைக் கடத்தியமை, கொலை செய்தமை போன்றன பிரதான அங்கமாக கருதப்படுகின்றன

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிடில் சிறிலங்காவில் நிச்சயமாக அனைத்துலக நீதிமன்றம் உருவாக்கப்பட்டிருக்கும்.

நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு மூத்தசட்டவல்லுனர்கள் நியமிக்கப்பட்ட போதிலும், இதன் அறிக்கையை அரசாங்கம் மூடி மறைத்தது.

உடலகம ஆணைக்குழுவின் அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இந்த ஆணைக்குழுக்களினால் எதுவும் நடக்கவில்லை.

இதனை ஆராய கொழும்பு வரவிருந்த அனைத்துலக பிரதிநிதிகளையும் தடுத்து நிறுத்தியது அரசாங்கம். இதனால்தான் பாரிய விபரீதங்களுக்கு  நாம் முகம்கொடுக்க நேர்ந்தது.

காணாமற்போனோர் தொடர்பாக எந்த விசாரணை அறிக்கையும் இதுவரை காலமும் வெளியிடப்படவில்லை.

உண்மையை கண்டறிவதற்கு தற்போது அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இதற்கமைய அரசாங்கம் அடுத்த கட்டமாக நான்கு முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

உண்மையை கண்டறிவதற்கான ஆணைக்குழுவை அமைக்கும். அதேபோன்று காணாமல் போனோருக்கான பணியகம் உள்ளக விசாரணையை முன்னெடுக்க நீதிமன்றம் ஆகியவற்றை அமைக்கவுள்ளது.

வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கும் நடவடிக்கை  எடுக்கப்படும்.

இதன்போது அனைத்துலக வல்லுநர்கள் இடம்பெறுவது குறித்து பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அனைத்துலக பிரதிநிதிகளின் பங்களிப்புடனான விசாரணைகள் என்பது சிறிலங்கா புதிதல்ல.

எஸ். டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க கொலை தொடர்பான விசாரணையில் வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். அதேபோன்று உடலகம ஆணைக்குழுவிலும் வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளடங்கியிருந்தனர்.

ஆகவே இதனை அடிப்படைவாத குழுக்கள் நாட்டு மக்களுக்கு அனைத்துலக என்ற பெயரில் பாரிய உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறிவருகின்றனர்.

ஒரு நாட்டில் பயங்கரவாதம் மனித உரிமை மீறல்கள் அதிகளவில் காணப்படுமாயின் அதனை எக்காரணம் கொண்டும் உள்நாட்டு விவகாரமாக கொள்ள முடியாது. அது அனைத்துலக  பிரச்சினையாக மாறும்.

அனைத்துலக பிரதிநிதிகளுடன் விசாரணைகளை முன்னெடுப்பது சிறப்பானதாக அமையும். இதன் ஊடாக உரிய தீர்வை பெறமுடியும் என்பதுடன் உண்மையை கண்டறிய முடியும்.

அதேபோன்று கலப்பு நீதிமன்றம் அமைப்பதும்சிறப்பானதாக இருந்தாலும் இதனை அரசாங்கம் ஏற்க மறுத்துள்ளதால் உள்ள க விசாரணை முன்னெடுக்கப்படும்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் அடிப்படைவாதிகளல்ல. அவர்களை இணைத்துக் கொண்டு செல்வதன் ஊடாகவே இந்த பயணத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும்.

அனைத்துலக அளவில் எழுந்துள்ள பிரச்சினை வடக்கு, கிழக்குக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தென்னிலங்கையிலும் பாரியளவிலான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விளைவாகத்தான் அனைத்துலக அழுத்தம் ஏற்பட்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *