மேலும்

ரவிராஜ், எக்னெலிகொட படுகொலைகளை மேற்கொண்டது சிறிலங்கா புலனாய்வு பிரிவே- விசாரணையில் உறுதி

N.Ravirajநாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட படுகொலைகள், சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் உயர்மட்ட அதிகாரி ஒருவர்  கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு, தகவல் வெளியிடுகையில்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலையின் மூளையாகச் செயற்பட்டவரான சரண் என்று அழைக்கப்படும் நபரை, சுவிற்சர்லாந்தில் இருந்து விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து வருவதற்கு, அனைத்துலக காவல்துறையின் உதவியை நாடியுள்ளது.

சந்தேக நபரான சரண், சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார்.  அவருக்கு அங்கு நிரந்தர விதிவிட உரிமை வழங்கப்படவில்லை.

இவரை சிறிலங்காவிடம் ஒப்படைக்குமாறு கோருவதற்கு நீதிமன்ற உத்தரவு ஒன்று தேவை. அத்துடன் இதற்கு அனைத்துலக காவல்துறையின் உதவியும் தேவைப்படுகிறது.

அதேவேளை, நடராஜா ரவிராஜ், மற்றும் பிரகீத் எக்னெலிகொட படுகொலைகள், புலனாய்வுப் பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட, சிறிலங்கா இராணுவத்தின் கேணல் தர அதிகாரி ஒருவர், ரவிராஜ் படுகொலையிலும் தொடர்புபட்டுள்ளார் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், 2006ஆம் ஆண்டு, நொவம்பர் மாதம் 10ஆம் நாள், கொழும்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தப் படுகொலை நடப்பதற்கு முதல் நாளான, 2006 நொவம்பர் 09ஆம் நாள்,  வாகரையில், 45 பொதுமக்கள் குண்டுவீச்சில் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரவிராஜ் தலைமையில் கொழும்பிலுள்ள ஐ.நா பணியகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவரது படுகொலை தொடர்பாக, சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த மூன்று பேரை சிறிலங்கா காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *