மேலும்

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக பிரதீப் மாஸ்டர் உள்ளிட்ட இருவர் கைது

joseph pararajasinghamதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக, கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் முக்கிய பிரமுகர்களான பிரதீப் மாஸ்டர் மற்றும் கஜன் மாமா ஆகிய இருவரையும், 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

2005ஆம் ஆண்டு டிசெம்பர் 25ஆம் நாள், மட்டக்களப்பு சென்.மேரிஸ் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், ஆயுதபாணிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தப் படுகொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும், சிறிலங்கா குற்றப் புலனாய்வுத்துறையின்,  அதிகாரிகள் குழுவொன்று நேற்று முன்தினம் மட்டக்களப்புக்குச் சென்று, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இரண்டு முக்கிய பிரமுகர்களாக இருந்த இருவரைக் கைது செய்துள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி நகர பிதாவும், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான, பிரதீப் மாஸ்டர் என்று அழைக்கப்படும், எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, மற்றும் கஜன் மாமா எனப்படும், ரெங்கசாமி கனகநாயகம் ஆகிய இருவரும் இந்தப் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பிிரதீப் மாஸ்டர்

கைது செய்யப்பட்டுள்ள பிிரதீப் மாஸ்டர்

இவர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணாவுடன் பிரிந்து சென்று, பிள்ளையானுடன் இணைந்து செயற்பட்டவர்களாவர்.

இவர்களை நேற்று கொழும்பு பிரதம நீதிவான் கிகான் பிலாபிட்டியவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னிலைப்படுத்தினர்.

அப்போது, 90 நாட்கள் தடுத்து வைத்து இந்தப் படுகொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள, நீதிவான் அனுமதி அளித்தார்.

அதேவேளை, இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய இரண்டு பேர், தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர்களை சிறிலங்காவுக்கு கொண்டு வருவதற்கு அனைத்துலக காவல்துறையின் அனுமதி கோரவுள்ளதாகவும், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்தப் படுகொலைக்கு மூன்று துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், கொலை நடந்த இடத்தில், ஆறு வெற்று ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும், வாகனத்தையும் கைப்பற்றுவதற்கு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *