மேலும்

நம்பகமான விசாரணைக்கு சிறிலங்காவின் சட்டங்கள் போதுமானதல்ல – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

Zeid Raad Al Husseinசிறிலங்காவின் குற்றவியல் சட்டமுறைமை சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணைகளை முன்னெடுப்பதற்குப் போதுமானதாக இல்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட்  ராட் அல் ஹுசேன் தெரிவித்தார்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நேற்று நடைபெற்ற சிறிலங்கா தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து, காணொலி தொழில்நுட்பத்தினூடாக உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், சிறிலங்காவில் புதிய  அதிபர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நல்லாட்சிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அது மட்டுமன்றி மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பவற்றை ஆராய்வதற்கு வரலாற்று ரீதியான சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளது.

பொறுப்புக்கூறலிலும் நிறுவன ரீதியான மறுசீரமைப்பிலும் நீண்டகால நல்லிணக்கத்தையும் மேற்கொள்ள சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

சிறிலங்காவுக்கும் ஐ.நா மனித உரிமை பேரவைக்கும் இடையில் உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளதை காணலாம்.

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையின் விசாரணையை நிராகரித்திருந்தது. அது மட்டுமன்றி விசாரணையாளர்கள் சிறிலங்கா செல்வதற்கு அனுமதியும் வழங்கப்படவில்லை.

மிகவும் மோசமான முறையில் சாட்சிகள் பாதிக்கப்பட்டனர்.

எனினும் புதிய அரசாங்கமும் கூட விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றவில்லை. ஐ.நா விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கவும் இல்லை.

ஆனால், புதிய அரசாங்கம் என்னுடனும் எனது பணியகத்துடனும் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாட்டில் இணைந்து செயற்பட்டு வருகிறது.

சிறப்பு அறிக்கையாளர்களையும் சிறிலங்கா அரசாங்கம் நாட்டுக்கு அழைத்துள்ளது.

ஜனவரி 8ஆம் நாள் நடைபெற்ற அதிபர்  தேர்தல் ஒரு சிறந்த அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது. அதன் பின்னர் கருத்துச் சுதந்திரம், கொழும்பிலாவது ஏற்பட்டுள்ளதைக் கவனிக்க முடியும்.

ஆனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அச்சுறுத்தல், சித்திரவதைகள், இராணுவ புலனாய்வு சேவைகள், கண்காணிப்பு தலையீடுகள் என்பன இடம்பெறுவதாக அறிவிக்கப்படுகிறது. இது நிறுவன ரீதியான கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது.

எனவே, சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை செயற்பாடுகளில் பாரிய மறுசீரமைப்புகள் தேவைப்படுகின்றன.

போர் முடிந்து ஆறு வருடங்கள் கழிந்த பின்னரும் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை.

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில நபர்கள் தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டியுள்ளது. இவை தொடர்பில் விரைவான விசாரணைகள் அவசியமாகின்றன.

இவ்வருடம் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 12 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  சித்திரவதைகள் தொடர்பில் 14 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

எவ்வாறெனினும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் மீளாய்வு செய்யும் சிறிலங்கா அரசாங்கத்தின் தீர்மானத்தை வரவேற்கிறேன்.

அழுத்கமவில் இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் எவ்விதமான விசாரணையும் நடத்தப்படவில்லை. எனவே, சிறிலங்கா அரசாங்கம் வன்முறையை தூண்டும் குரோதப் பேச்சுக்களை குற்றச் செயலாக கருதும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனவரி மாதத்திலிருந்து அதிபர் சிறிசேன மற்றும் அரசாங்கத்தின் ஏனைய முக்கியஸ்தர்கள் நல்லிணக்கம் தொடர்பில் வலியுறுத்திவருகின்றனர்.

எமது முன்னைய அறிக்கையில், உள்ளக விசாரணை தோல்வி அடையுமென விளக்கப்படுத்தியிருந்தோம். அது மாத்திரமன்றி உண்மையை கண்டறிதல், பொறுப்புக் கூறுதல் என்பன தோல்வி அடைந்துள்ளதாக கூறியிருந்தோம்.

காணாமல் போனோர் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிபர்  ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை தொடர்பாக கரிசனைகள் எழுப்பப்பட்டன.

அந்த ஆணைக்குழு கலைக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் அனைத்தும் சுதந்திரமான நிறுவனமொன்றிடம் வழங்கப்பட வேண்டும்.

எமது அறிக்கையை சிறப்பு நிபுணர் குழுவினர் தயாரித்து வெளியிட்டனர். சிறப்பு ஆணையாளர்களும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

எமது விசாரணைகள் மூலம் அனைத்துலக மனித உரிமை சட்டங்கள், அனைத்துலக மனிதாபிமான சட்டங்கள் என்பன மீறப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டன.

இரண்டுத் தரப்புக்களாலும் இந்த மீறல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த சம்பவங்கள் ஒரு நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டால் அதிகமான குற்றங்கள் போர்க்குற்றங்களாகவும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாகவும் கணிக்கப்படலாம்.

சிறிலங்கா படையினரும் துணைஆயுத குழுக்களும் இணைந்து சட்டவிரோதமான முறையில் கொலைகள் போன்றவைகளில் ஈடுபட்டுள்ளமையை நாம் கண்டறிந்தோம். தமிழ் அரசியல்வாதிகள், மனிதாபிமான பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் இலக்கு வைக்கப்பட்டிருந்தனர்.

புலிகளும் சட்டவிரோத கொலைகளை செய்திருந்தனர். தமிழ் அரசியல் எதிரிகள், பொது அதிகாரிகள், கல்விமான்கள்,பொதுமக்கள், புலிகளால் கொல்லப்பட்டனர்.

வெள்ளை வான் கலாசாரம் தொடர்பிலும் நாம் எமது அறிக்கையில் ஆவணப்படுத்தியிருந்தோம்.

ஆண்கள், மற்றும் பெண்கள் மீதான பாதுகாப்பு படையினரின்  வல்லுறவுகள், பாலியல் ரீதியான வன்முறைகள் என்பவற்றை கண்டு நாம் அதிர்ச்சியடைந்தோம்.

புலிகளும் பதினைந்து வயதுக்கு கீழ்பட்ட சிறுவர்களை படையில் சேர்த்தமையும் நாம் கண்டு பிடித்துள்ளோம். போரின் இறுதிக்கட்டத்தில் இவை தீவிரமாக இடம்பெற்றுள்ளன.

போரின் இறுதி மாதத்தில் பொதுமக்கள் பணையக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தமையும் அவதானிக்க முடிந்தது.

இந்த வகையில் பார்க்கும் போது சிறிலங்கா அரசாங்கப் படைகளும் புலிகளும் இந்த விடயத்தில் அனைத்துலக மனிதாபிமான சட்டத்தை பின்பற்றுவதில் தோல்வி அடைந்துள்ளனர்.

அரசாங்கப் படையினர், மருத்துவ மனைகள் மீது தாக்குதல் நடத்தியமை, போர் தவிர்ப்பு வலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையையும் கண்டுபிடித்துள்ளோம்.

அது மட்டுமன்றி சிறிலங்கா அரசாங்கம் மனிதாபிமான தேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதித்திருந்தமையை எமது விசாரணையில் கண்டுபிடித்தோம்.

சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைத்துள்ள அர்ப்பணிப்புக்களை நான் வரவேற்கிறேன்.

அதாவது சிறிலங்காவின் சில அரசியல் கட்சிகள் மற்றும் இராணுவத்தினரின் ஒரு பகுதியினரின் எதிர்ப்புக்களை தாண்டி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தவும் பொறுப்புக்கூறலை மேற்கொள்ளவும் உறுதி அளித்துள்ள  சிறிலங்கா அரசாங்கத்தின் வாக்குறுதியை வரவேற்கிறோம்.

எனினும் சிறிலங்காவின் குற்றவியல் சட்ட முறைமையானது சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணையை முன்னெடுப்பதற்கு போதுமானதாக இல்லை.

அதுமட்டுமன்றி மனித உரிமை பேரவை கோரிய பொறுப்புக்கூறலை வழங்கவும் இது போதுமானதாக இல்லை.

முதலில் சிறிலங்கா அரசாங்கம் சாட்சிகளை பாதுகாக்கும் திட்டத்தை பலப்படுத்த வேண்டும்.

இரண்டவதாக உள்ளக சட்ட கட்டமைப்பானது அனைத்துலக குற்ற விடயங்களை ஆராய போதுமானதாக இல்லை. அனைத்துலக குற்றங்கள் நிச்சயம் ஆராயப்பட வேண்டியது அவசியமாகும்.

மூன்றாவதாக சிறிலங்கா அரசாங்க பாதுகாப்புத்துறை மற்றும் நீதித்துறை மறுசீரமைக்கப்பட வேண்டும்.

பாதுகாப்பு படையினர், காவல்துறையினர், புலனாய்வுப் பிரிவினர் தண்டனையிலிருந்து தப்பிக்கும் சலுகையை அனுபவித்து வருகின்றனர். எனவே, இந்த துறை முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும்.

அதனால் தான் நான் கலப்பு நீதிமன்றமொன்றை பரிந்துரைத்தேன். அதனூடாக அனைத்துலக நீதிபதிகள் விசாரணையாளர்கள் சட்டத்தரணிகள் ஆகியோரைக் கொண்டு மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க வேண்டுமென பரிந்துரை செய்தேன்.

இந்த விடயங்களில் சிறிலங்காவுக்கு உதவி வழங்க ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தயாராக உள்ளது.

தற்போது சிறிலங்கா சிறந்த எதிர்பார்ப்புக்களைஉருவாக்கியுள்ளது. எனவே, எமது அறிக்கையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் நம்பகமான பொறுப்புக்களை அடைவதற்கும் அனைத்துலக தரத்தில் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் உதவியாக இருக்குமென நம்புகிறேன்.

இந்த விடயத்தில் ஐ.நா மனித உரிமை பேரவை முக்கியமான ஒரு பங்கை வகிக்க வேண்டும்.

சிறிலங்காவில் பொறுப்புக்கூறலிலும் நல்லிணக்கத்திலும் முன்னேற்றத்தை ஏற்படுத்த ஐ.நா மனித உரிமை பேரவையின் பங்களிப்பு அவசியமாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *