மேலும்

சிறிலங்காவைக் கண்காணிக்க 337,800 டொலர் நிதி கோருகிறது ஜெனிவா பணியகம்

UNHRCஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் சமர்ப்பித்துள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவை நடைமுறைப்படுத்துவதற்கும், மீளாய்வுகள், கண்காணிப்புகளை மேற்கொள்வதற்கும், 337,800 டொலர் நிதி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான நிதி ஒதுக்கீட்டை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் உறுப்பு நாடுகளிடம் கோரியுள்ளது.

சிறிலங்காவில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்த தீர்மானம் இன்று நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக, இதனை நடைமுறைப்படுத்துவதற்கான செலவினம் பற்றிய மதிப்பீட்டை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வெளியிட்டுள்ளது.

தீர்மான வரைவின் படி, சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை கண்காணிக்கவும், பணிகளை மேற்கொள்ளவும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் குழுக்கள் கொழும்புக்கு, தலா 14 நாட்களைக் கொண்ட, ஆறு பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீட்டுக்கும் இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கீகாரம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், சிறிலங்காவில் விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் 1.4 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீட்டைக் கோரிய போது, அதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், அதுபற்றிய உப வாக்கெடுப்பும் நடத்தப்பட்டிருந்தது.

எனினும், இம்முறை சிறிலங்காவின் இணக்கப்பாட்டுடன்  தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளதால், நி்தி ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *