மேலும்

உள்ளகப் பொறிமுறையிலேயே விசாரணை – வெளிநாட்டு தலையீடு இருக்காது என்கிறார் ரணில்

Ranilமூன்று சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளகப் பொறிமுறையுடனான விசாரணையே நடத்தப்படும் என்றும், அனைத்துலக விசாரணை நடத்தப்படவுள்ளதாக பரப்பப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

ஊடக ஆசிரியர்கள், பிரதானிகளை நேற்று அலரி மாளிகையில் சந்தித்த போதே, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்திற்கு அமைய உள்ளக விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படும்.

அந்த உள்ளகப் பொறிமுறையில் மூன்று சிறப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்படும்.

காணாமல்போனோர் தொடர்பாக கண்டறியும் பணியகம், சிறப்பு சட்ட பணியகம் மற்றும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு என்பனவே இந்த மூன்று குழுக்களாகும்.

காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தில் கருணைச் சபை ஒன்றும் உருவாக்கப்படும்.

மகாநாயக்க தேரர்கள், இந்து மதத் தலைவர்கள், கிறிஸ்வத ஆயர்மார்கள், இஸ்லாமிய மதத் தலைவர்கள் உள்ளிட்ட நான்கு மதத் தலைவர்களும் அடங்கியதாக இந்தக் குழு அமையும்.

காணாமல்போனோர் தொடர்பாக இந்தக் குழுவுக்கு கிடைக்கும் முறைப்படுகள் ஆராயப்பட்டு தீர்வுகள் எட்டப்படும்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அமைக்கப்படுவது தொடர்பாக தென்னாபிரிக்காவுடன் பேச்சு நடத்தப்படும்.

அத்துடன் சிறப்பு சட்டக் குழு பணியகம் ஒன்று ஏற்படுத்தப்படும். காலத்துக்குக் காலம் அனைத்துலக சட்ட வல்லுனர்களின் உதவி தேவைப்பட்டால் அதனை இக் குழுவினூடாக நாடுவோம்.

இந்த விடயம் தொடர்பாக சிறிலங்கா சட்டவாளர் சங்கத்துடனும் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

அனைத்துலக சட்ட வல்லுனர்களின்  சட்ட உதவி தேவைப்பட்டால் மாத்திரமே பெற்றுக் கொள்ளப்படும்.

இது தொடர்பாக சிறிலங்கா சட்டவாளர் சங்கத்தினால் சட்டப் பொறிமுறையொன்றை தயாரிக்கப்பட்டு அதற்கு உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெறப்படும்.

எனவே ஐ.நா. தீர்மானத்திற்கு அமைய உள்ளகப் பொறிமுறையுடனான விசாரணையே மேற்கொள்ளப்படவுள்ளதை தவிர இது அனைத்துலக விசாரணை அல்ல.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவே தனது ஆட்சிக் காலத்தில் பரணகம ஆணைக்குழுவை நியமித்து அதற்கு வெளிநாட்டு சட்ட வல்லுனர்களின் உதவியைப் பெற்றுக் கொண்டார் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *