மேலும்

கி.பி. அரவிந்தன் தமிழர் வாழ்வியலின் ஒரு குறியீடு

ki pi-swiss-book (4)ஈழப் போராட்ட முன்னோடி, கவிஞர், ஊடகவியலாளர் கி.பி. அரவிந்தன் அவர்களின் மறைவை ஒட்டி அவரது நண்பர்கள், தோழர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூலான கி.பி. அரவிந்தன் – ஒரு கனவின் மீதி அறிமுக நிகழ்வு, கடந்த சனிக்கிழமை சுவிற்சர்லாந்தின் பேர்ண் நகரிலுள்ள ஞானலிங்கேச்வரர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

சிவராம் நினைவு மன்றம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவரும் முற்போக்கு எழுத்தாளருமான தோழர் பா. செயப்பிரகாசம் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார்.

முதற் பிரதியை பிரான்ஸ் நாட்டைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் மன்றத்தின் பணிப்பாளரும் மனித உரிமைப் போராளியுமான ச.வி. கிருபாகரன் பெற்றுக் கொண்டார்.

ஊடகவியலாளர் சண் தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், இலக்கியவாதி நயினை சிறி அவர்கள் நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார்.

கி.பி. அரவிந்தனின் அரசியல் சிந்தனைகள் தொடர்பில் அரங்கச் செயற்பாட்டாளர் திருமதி சிவாஜினி தேவராஜா அவர்களும் கி.பி. அரவிந்தன் அவர்களுடனான தனது அறிமுகம் என்ற தலைப்பில் ச.வி. கிருபாகரன் அவர்களும் உரையாற்றினர்.

ki pi-swiss-book (4)

ki pi-swiss-book (2)ki pi-swiss-book (1)ki pi-swiss-book (3)

தோழர் பா. செயப்பிரகாசம் தனது சிறப்புரையில், கி.பி. அரவிந்தன் அவர்களின் போராட்ட வாழ்வு ஏனையோருக்கு முன்மாதிரியான ஒன்று எனக் குறிப்பிட்டதுடன், தான் ஒரு மனிதனாகவும், தமிழனாகவும், சர்வதேச மனிதனாகவும் இருப்பதாலேயே அரவிந்தன் தொடர்பான நூலை வெளியிட முன்வந்ததாகவும் குறிப்பிட்டார்.

நூலை அறிமுகம் செய்த நயினை சிறி, ஈழப் போராட்டத்தை ஆய்வு செய்ய முயலும் எவரும் கி.பி. அரவிந்தன் – ஒரு கனவின் மீதி என்ற நூலைத் தவிர்த்து விட்டு அத்தகைய ஆய்வை முழுமையாகச் செய்துவிட முடியாது என்றார்.

சிவாஜினி தேவராஜா தனது உரையில், கி.பி. அரவிந்தன் தமிழர் வாழ்வியலின் ஒரு குறியீடு, தனது அரசியல் அனுபவத்தை இலக்கியமாக மாற்றிய அவர் அதற்காக கவிதையைத் தேர்ந்தெடுத்தார் என்றார்.

நூல் அறிமுகத்தைத் தொடர்ந்து தோழர் பா. செயப்பிரகாசம் அவர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போது ஈழப் போராட்டத்தின் பின்னடைவு தொடர்பில் விஞ்ஞானபூர்வமான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்ற விடயம் ஆராயப்பட்டமை குற்ப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *