மேலும்

தீர்மான வரைவு குறித்து ஜெனிவாவில் இன்றும் நாளையும் கூட்டங்களை நடத்துகிறது அமெரிக்கா

UNHRCசிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், அமெரிக்கா தயாரித்துள்ள தீர்மான வரைவு தொடர்பாக, இன்றும் நாளையும் ஜெனிவாவில் முறைசாராக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க நிரந்தர விதிவிடப் பிரதிநிதியால் இந்த முறைசாராக் கலந்துரையாடல்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நடப்பு கூட்டத்தொடரில், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைப்பது உள்ளிட்ட யோசனைகளை உள்ளடக்கிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற அமெரிக்க திட்டமிட்டுள்ளது.

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஆறு பக்கங்களில், 26 பந்திகளைக் கொண்டதாக வரைவுத் தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தயாரித்துள்ள இந்த தீர்மான வரைவுக்கு பிரித்தானியா, மசிடோனியா, மொன்ரெனிக்ரோ ஆகிய நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.

இந்த தீர்மான வரைவு, கடந்த வாரம் சிறிலங்காவிடமும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடமும் கையளிக்கப்பட்டன.

இந்தநிலையில், இந்த தீர்மான வரைவு, தொடர்பாக உறுப்பு நாடுகள், அரசா சார்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகளுடன் கலந்துரையாடுவதற்காக ஜெனிவாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்றும் நாளையும், இரண்டு பகிரங்க முறைசாராக் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.

ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தின் 23ஆவது அறையில், இன்று காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரை (ஜெனிவா நேரம்) முதலாவது முறைசாராக் கூட்டம் இடம்பெறும்.

அதேவேளை, நாளை மதியம் 12 மணி தொடக்கம், 1.30 மணி வரையில், ஐ.நாவின் 23 ஆவது அறையில், இரண்டாவது முறைசாராக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெறவுள்ள இந்த இரண்டு கூட்டங்களிலும், தீர்மான வரைவு தொடர்பாக ஆராயப்பட்டு திருத்தங்கள் முன்வைக்கப்படும் என்று ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *