மேலும்

ஐ.நா அறிக்கை குறித்து சுதந்திரக் கட்சி, ஐதேக உயர்மட்டங்களில் ஆலோசனை

Maithri-Ranil-Chandrikaசிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கை குறித்து, ஆராய்வதற்காக சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையிலான சிறப்புக் குழுவொன்றை நியமித்துள்ளது சிறிலங்கா சுதந்திரக் கட்சி.

இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க,

‘ஐ.நா அறிக்கை தொடர்பான கட்சியின் நிலைப்பாட்டை முடிவு செய்வதற்காக, சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அவரது இல்லத்தில் நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்புக் குழுவினர், துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடி, தமது பரிந்துரைகளை சிறிலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழுவிடம் சமர்ப்பிக்கும்.

இந்த சிறப்புக் குழு இந்த வாரம் கூடி ஆராயவுள்ளது. 14 நாட்களுக்குள் இந்தக் குழுவின் அறிக்கை சுதந்திர கட்சி மத்திய குழுவிடம் கையளிக்கப்படும்.

அதன் பின்னர், மத்திய குழு ஐ.நா அறிக்கை தொடர்பான முடிவை எடுக்கும்’ என்றும் தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் காப்பாளரும், முன்னாள் அதிபருமான சந்திரிகா குமாரதுங்க தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்புக் குழுவில், நிமால் சிறிபால டி சில்வா, மகிந்த சமரசிங்க, ஜோன் செனிவிரத்ன, டிலான் பெரேரா, துமிந்த திசநாயக்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கிடையே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்காக ஐதேக செயற்குழு இன்று கூடவுள்ளது.

இன்று பிற்பகல் 4 மணியளவில், சிறிகோத்தாவில் இந்தக் கூட்டம் இடம்பெறும் என்று கட்சியின் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *