மேலும்

அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை வலியுறுத்துகிறது அமெரிக்காவின் தீர்மான வரைவு

eagle-flag-usaசிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்கால மீறல்களை விசாரிக்க அனைத்துலக நீதிபதிகள், சுதந்திரமான வழக்குத் தொடுனர்களை உள்ளடக்கிய பொறிமுறையை உருவாக்குவதற்கு, வலியுறுத்தும், தீர்மான வரைவையே அமெரிக்கா தயாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா முன்வைக்கவுள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தின் முதலாவது வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப தீர்மான வரைவு, சிறிலங்கா அரசாங்கத்திடம் நேற்று அமெரிக்காவினால் கையளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த முதலாவது தீர்மான வரைவில், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்கால மீறல்களை விசாரிக்க அனைத்துலக நீதிபதிகள், சுதந்திரமான வழக்குத் தொடுனர்களை உள்ளடக்கிய பொறிமுறையை உருவாக்குவது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இது போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு, சிறப்பு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை கருத்தில் எடுத்து தயாரிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வருவது தொடர்பாக கலந்துரையாடும், முதலாவது முறைசாரா கூட்டத்தை அமெரிக்கா இன்று ஜெனிவாவில் ஒழுங்கு செய்துள்ளது. இதில் இந்த தீர்மான வரைவு குறித்து ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் திங்கட்கிழமை இந்த தீர்மான வரைவு வாசகங்கள் குறித்த முதலாவது முறைசாரா கலந்துரையாடலுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்கா தொடர்பான இறுதி தீர்மான வரைவு எதிர்வரும் 24ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *