மேலும்

ஐ.நா அறிக்கை: முடிவல்ல, ஆரம்பம் தான் – என்கிறார் ஐ.நா பேச்சாளர்

Rupert-Colvilleசிறிலங்கா குறித்த ஐ.நா விசாரணை அறிக்கை முடிவல்ல. இது ஒரு ஆரம்பமாகத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ரூபேர்ட் கொல்வில்.

ஜெனிவாவில் நேற்று வெளியிடப்பட்ட ஐ.நா விசாரணை அறிக்கை மற்றும் அதன் தொடர்ச்சியாக இடம்பெறக் கூடிய விடயங்கள் தொடர்பாக பிபிசியிடம் கருத்து வெளியிட்டுள்ளார் அவர்.

“இது ஒரு பெரிய அறிக்கை. 9 ஆண்டு காலகட்டத்தில் நடந்த விடயங்களை அது பரிசீலிக்கிறது. அது சிறிலங்காவுக்குள்ளேயும் வெளிநாடுகளிலும் எப்படி பார்க்கப்படுகிறது என்பதை பார்க்கவேண்டும்.

பின்னர், ஐநா மனித உரிமைகள் பேரவையில் ஒரு தீர்மான வரைவு முன்வைக்கப்படும். அதையொட்டி ஒரு தீர்மானத்தை அவர்கள் கொண்டுவர விரும்பினால் அவர்களுக்குள் பேச்சு நடத்தி, அதை அடுத்த சில நாட்களில் கொண்டு வருவார்கள்.

இந்தத் தீர்மானம் பேரவைக் கூட்டத்தொடரின் இறுதி நாட்களில் விவாதிக்கப்படும்.

தீர்மான வரைவில் பிரச்சினை இருந்தால் கடுமையான விவாதங்கள் இருக்கும். அதில் விட்டுக்கொடுப்புகள் தேவைப்படலாம். எனவே பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் நாடுகளைக் கட்டுப்படுத்துபவை அல்ல. அவை சட்டங்கள் அல்ல. ஆனால் அவை, உலகின் மிகஉயர்ந்த மனித உரிமை அமைப்பின் கருத்து.

இந்த அமைப்பில் உள்ள சிறிலங்காவின் சக நாடுகள் அடுத்து என்ன நடக்கும் என்பதை முடிவு செய்வார்கள்.

அதேபோல, மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எல்லாம் ஐ.நா பொதுச்சபைக்கும் கொண்டு செல்லப்படும்.

இது அனைத்துலக நாடுகளின் கவனத்தில் இருக்கும். எனவே இந்த அறிக்கைக்கு எந்த அளவு ஆதரவு இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் எல்லாம் நடக்கும்.

சிறிலங்கா இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அதைப் பற்றி மனித உரிமைகள் பேரவை தான் முடிவு செய்யவேண்டும்.

ஆனால் அந்த விடயத்தில் எனைய பலரும் தலையிடுவார்கள். அனைத்துலக ஊடகங்கள், தன்னார்வ நிறுவனங்கள் எல்லாம் இதை கையிலெடுக்கும்.

இந்த விவகாரம் இந்த அளவுக்கு வந்ததற்கே தன்னார்வக் குழுக்கள் ஒரு காரணம். இது முடிவல்ல. இது ஒரு ஆரம்பமாகத்தான் இருக்கும்.

நடந்ததைக் கணக்கிலெடுத்துக் கொண்டு, அது குறித்து அனைத்து சமுதாயங்களையும் திருப்திபடுத்தும் வகையில் நடவடிக்கைகளை எடுத்து, மேலே செல்ல இது ஒரு உண்மையான சந்தர்ப்பத்தை இது தருகிறது.

அந்தப் பாதையை சிறிலங்கா தேர்ந்தெடுத்தால் அதற்கு அனைத்துலக அளவில் மிகப்பெரிய நல்லெண்ணம் கிடைக்கும். அதை சிறிலங்கா விரைவில் செய்யும் என்பதுதான் எங்கள் நம்பிக்கை”, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *