மேலும்

விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டும் – சுமந்திரன்

sumanthiranபோர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க சிறிலங்கா அரசாங்கம் முன்மொழிந்துள்ள சுதந்திரமான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனிவா சென்றுள்ள அவர், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் செயல்முறையில், அனைத்துலக பங்களிப்பு இருந்தால் மட்டுமே, அது உண்மையில் சுதந்திரமானதாகவும், நம்பகமானதாகவும் இருக்கும்.

முன்னைய அரசாங்கங்களின்  அனுபவங்களால், வாக்குறுதிகள் செயல்வடிவம் பெறுமா என்று மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.

உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள்,சிறிலங்காவின் நீதித்துறை மீது நம்பிக்கையில்லை.

எனவே, அனைத்துலக தர நியமங்களுக்கேற்ப நடத்தப்படக் கூடிய உள்ளக விசாரணையில், அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்க வேண்டியதே, மிகச் சிறந்தது.

காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விவகாரங்களும் தீர்க்கப்பட வேண்டியுள்ளது.

போர் முடிந்து ஆறு ஆண்டுகளாகியும், தமிழ் மக்களுக்குச் சொந்தமான சில காணிகள் மட்டும் தான் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்காக மட்டும் நாம் இந்த அனைத்துலக விசாரணையைக் கோரவில்லை. எல்லா இலங்கையர்களினதும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன.

வல்லுறவுகள், சித்திரவதைகள், படுகொலைகள் என்று எல்லாவற்றையும் சுதந்திரமான தீர்ப்பாயம் ஒன்று விசாரிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த செயல்முறையின் மீது எந்த நம்பிக்கையையும் கொள்ளமாட்டார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கருத்து “விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டும் – சுமந்திரன்”

  1. மனோ says:

    வன்னிப் போரில் ஈடுபட்ட அத்தனை நாடுகளின் பிரதிநிதிகள் யாரும் இந்த விசாரணையில் பங்கு பெற அனுமதிக்கக் கூடாது. இத்தகைய கோரிக்கையையும் தமிழர் தரப்பு முன் வைக்க வேண்டும். சுமந்திரன் இதையும் பேசுவாரா?

Comments are closed.