மேலும்

சிறிலங்காவின் ‘பொறுப்புக்கூறல்’ தடுமாற்றம்

சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் அனைத்துலக நாடுகளை ஒன்றுபடுத்துவதில் அமெரிக்கா முன்னிற்க வேண்டும். தற்போது அமெரிக்கா சிறிலங்காவின் உள்நாட்டுப் பொறிமுறைக்கு ஆதரவளிப்பதானது அனைத்துலகப் பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கு மிகப் பாரிய தடையாக உள்ளது.

இவ்வாறு the diplomat ஊடகத்தில் Taylor Dibbert எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது தொடர் ஆரம்பமாவதற்கு இன்னமும் சில நாட்கள் உள்ளநிலையில், சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த மீறல்களை உள்ளடக்கிய ஐ.நா மனித உரிமைகள் அறிக்கை வெளியீடு தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்றப் போகின்றது என்பது தொடர்பாகவும்,  இந்த விவகாரங்கள் தொடர்பில் உள்நாட்டில் ‘பொறுப்புக்கூறும்’ கடப்பாட்டை இந்த அரசாங்கம் எவ்வாறு கையாளப் போகின்றது என்பது தொடர்பாகவும் பெரும்பாலான  இலங்கையர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

கொழும்பின் பொறுப்புக்கூறும் பொறிமுறையானது உண்மையில் எவ்வாறு அமைந்திருக்கும்? இவ்வாறானதொரு பொறிமுறை தனது செயற்பாட்டை மிகவும் சரியாக மேற்கொள்வதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளதா? இப் பொறிமுறையில் அனைத்துலகச்  செயற்பாட்டாளர்கள் எவ்வாறான பங்களிப்பை வழங்கவுள்ளனர்?

இலங்கை வாழ் சிறுபான்மைத் தமிழ் மக்கள் உள்நாட்டுப் பொறுப்பளிக்கும் பொறிமுறையில் நம்பிக்கை கொண்டிராவிட்டாலும் கூட, இந்நாட்டின் புதிய அரசாங்கமானது உள்நாட்டுப்  பொறிமுறையைச் செயற்படுத்தவுள்ளதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது.

பல பத்தாண்டுகளாக சிங்களப் பெரும்பான்மை அரசு பல்வேறு ஆணைக்குழுக்கள் மற்றும் உள்நாட்டுப் பொறுப்புக்கூறும் பொறிமுறைகளை உருவாக்கிய போதிலும் இன்னமும் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளவில்லை.

சிறிலங்காவில் இன்னமும் மீறல்கள் தொடர்கின்றன. நான் கடந்த மாதம் கொழும்பில் இருந்தபோது, சிறிலங்கா அரசின் உள்நாட்டுப் பொறிமுறை தொடர்பான இந்த விவாதமானது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஒருபுறத்தே, உண்மையில் இவ்வாறான மோசமான மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் பொருத்தமான வகையில் முகாமை செய்யப்பட்ட, நாடு கடந்த நீதிப் பொறிமுறை ஒன்று தேவைப்படுகிறது.

பல பத்தாண்டுகால யுத்தத்தின் விளைவாக தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் இவர்களைப் பொறுத்தளவில் அனைத்துலக மட்ட நீதிப் பொறிமுறையையே வேண்டிநிற்கின்றனர்.

மறுபுறத்தே, பெரும்பாலான இலங்கையர்கள் அனைத்துலகப் பொறிமுறையை விரும்பவில்லை. இதனால் நாட்டில் இரு வேறு விவாதங்கள் இடம்பெறுகின்றன.

இதற்கும் மேலாக, அனைத்துலக அரங்கில், அமெரிக்காவானது சிறிலங்காவுக்கு எதிரான பொறுப்புக்கூறும் பொறிமுறை தொடர்பில் அழுத்தம் கொடுப்பதில் முன்னிலையில் இருந்தது. ஆனால் அண்மையில் அமெரிக்காவின் ஒபாமா அரசாங்கமானது தான் சிறிலங்காவின் உள்நாட்டுப் பொறிமுறைக்கு ஆதரவளிப்பதைத் தெளிவாகக் காண்பித்துள்ளது.

சிறிலங்காவிற்கு எதிராக அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பதில் கடந்த சில ஆண்டுகளாக மிகத் தீவிரமாக நின்ற அமெரிக்காவானது தற்போது இதற்குப் பதிலாக சிறிலங்காவின் உள்நாட்டுப் பொறிமுறையை ஏற்றுக் கொண்டுள்ளமையானது தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றியுள்ளதையே சுட்டிக்காட்டுவதாக சில அவதானிகள் விபரிக்கின்றனர்.

சிறிலங்காவுக்கான அனைத்துலக பொறுப்பளித்தல் பொறிமுறை ஒன்றை அமைப்பதானது அனைத்துலக நாடுகளின் கணிசமான மற்றும் போதியளவு ஆதரவின்றி சாத்தியமாகாத ஒன்றாகும். ஐ.நா பாதுகாப்புச் சபையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை இயற்றுவதன் மூலமே இது சாத்தியமாகும்.

சிறிலங்காவில் வாழும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் அனைத்துலக நாடுகளை ஒன்றுபடுத்துவதில் அமெரிக்கா முன்னிற்க வேண்டும். ஆனால் தற்போது இதே அமெரிக்கா சிறிலங்காவின் உள்நாட்டுப் பொறிமுறைக்கு ஆதரவளிப்பதானது அனைத்துலகப் பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கு மிகப் பாரிய தடையாக உள்ளது.

சிறிலங்காவில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்துடன் அமெரிக்க அரசாங்கம் மிகவும் விரைவாகவும் முழுமனதுடனும் ஈடுபடுவதானது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்களான நிஷா பிஸ்வால் மற்றும் ரொம் மலினோவ்ஸ்கி ஆகிய இருவரும் சிறிலங்காவுக்கு அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதானது சிறிலங்காவிற்குள் பெரும் மேலும் கருத்து வேறுபாடுகள் உருவாக வழிவகுத்துள்ளது.

எந்தவொரு உள்நாட்டுப் பொறிமுறையும் பலவீனமானதாகவே இருக்கும் என்பதால் தமிழ் மக்கள் இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலில்லை. இதில் தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

இதே பொறிமுறை அனைத்துலக மட்டத்தில் இடம்பெறும் போது அது வினைத்திறன் மிக்கதாக இருக்கும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

பாரபட்சமற்ற, சுயாதீனமான உள்நாட்டு பொறுப்பளித்தல் விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைப்பது எவ்வளவு கடினமானது என்பதை கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் ஊடகவியலாளரான குசல் பெரேரா தனது அண்மைய பத்தியில் விளக்கியுள்ளார்.

தற்போது பல்வேறு சவால்கள் எழுந்துள்ள நிலையிலும், சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கமானது உள்நாட்டில் உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கான வாய்ப்பொன்று வழங்கப்படும் என்பதையே தற்போதைய சூழல் தெளிவாக சுட்டிநிற்கிறது.

சிறிலங்காவின் போருக்குப் பின்னான பல்வேறு விவகாரங்கள் போன்றே உள்நாட்டுப் பொறிமுறை விவகாரமும் மிகவும் சிக்கலானதொரு விவகாரமாக உள்ளது. இனிவரும் வாரங்களில் என்ன நடக்கப்போகின்றதோ அதனை இனி மாற்ற முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *