மேலும்

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குமா ஐ.நா அறிக்கை? – அமந்த பெரேரா

Vijitha Pavanendran -victimஜெனீவா எங்குள்ளது என்பது தவராசா உத்தரைக்கு மிகத் துல்லியமாகத் தெரியாவிட்டாலும், சிறிலங்காவின் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக சுவிசில் உள்ள  நகரில் மிக விரைவில் வெளியிடப்படவுள்ள அறிக்கைக்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்.

சிறிலங்கா அரசாங்கம் போர்க்குற்ற அறிக்கையை ஆறு மாத காலம் தாமதித்து வெளியிடுமாறு கோரிக்கை விடுத்த நிலையில் ஜெனீவாவைத் தளமாகக் கொண்டியங்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையகமானது போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான தனது அறிக்கையை இன்னும் சில வாரங்களில் வெளியிடவுள்ளதாக இறுதியாக அறிவித்துள்ளது.

இந்த அறிக்கையானது தம் போன்ற பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்யும் என உத்தரை போன்ற போன்ற பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் கருதுகின்றனர். சிறிலங்காவில் இடம்பெற்ற நீண்ட கால யுத்தத்தின் போது தமது பிள்ளைகளைப் பறிகொடுத்து விட்டு ஏங்கித் தவிக்கும் மக்கள் ஜெனீவாவின் அறிக்கைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

உத்தரையின் கணவன் 2009 மார்ச் 20ல் காணாமாற் போனார். இவர் கொழும்பிற்கு கிழக்காக 350 கிலோமீற்றர் தொலைவிலுள்ள உன்னிச்சை என்ற கிராமத்தில் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த வேளையிலேயே காணாமற் போனார். அன்றிலிருந்து உத்தரை தனது கணவனுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

‘என்னால் முடிந்தளவு எல்லா அதிகாரிகளிடமும் நான் சென்றுள்ளேன். எனது கணவனுக்கு என்ன நடந்தது என்பதை என்னால் அறிய முடியவில்லை’ என உத்தரை கூறினார். இவர் தனது கணவர் தொடர்பான தகவல்களை அறிவதற்காக சிறிலங்கா காவற்துறையின் குற்றவியல் விசாரணைப் பிரிவு, அதிபர் ஆணைக்குழு, சிறிலங்கா அரசாங்க அலுவலகங்கள் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புக்களிடமும் முறையிட்டுள்ளார்.

தனது கணவர் தொடர்பான தகவலைப் பெறுவதற்குப் பதிலாக தான் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக உத்தரை தெரிவித்தார். 2013ல் இவர் சிறிலங்கா காவற்துறையிடம் விசாரித்த போது, காணாமற் போனதாகத் தேடுவதற்குப் பதிலாக கணவர் இறந்து விட்டதாகப் பதிவு செய்யுமாறு காவற்துறை அதிகாரிகள் தன்னை அச்சுறுத்தியதாகவும் இதுவே தனக்குப் பாதுகாப்பாக இருக்கும் எனவும் அவர்கள் மிரட்டியதாகவும் உத்தரை கூறினார்.

1976-2009 வரையான காலப்பகுதியில் சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தில் காணாமற் போன பல ஆயிரக்கணக்கான பொதுமக்களுள் உத்தரையின் கணவரும் ஒருவராவார்.

காணாமற் போனோர் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்கும் மேலாக, சிறிலங்கா அதிபர் ஆணையகம் தனிப்பட்ட ரீதியாக காணாமற் போனோர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. 2013 தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணையின் மூலம் 20,000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்குள் காணாமற் போன பொதுமக்கள் மற்றும் போர் வீரர்களும் உள்ளடங்குவர்.

1990 தொடக்கம் காணாமற் போனோர் தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் 16,064 முறைப்பாடுகளைப் பதிவுசெய்துள்ளது.

இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு எட்டுவதில் சிறிலங்கா அரசாங்கம் தயக்கம் காண்பித்துள்ளது. ஆகவே சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூறத் தவறியதன் காரணமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்தவகையில் சிறிலங்காப் போரின் போது இடம்பெற்ற காணாமற் போனவர்கள், கடத்தல்கள், பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள் உட்பட பல்வேறு மீறல்களை உள்ளடக்கிய அறிக்கையை மனித உரிமைகள் பேரவை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே 2009ல் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற போது பொது மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயங்கள் மீது எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமையும் இந்த விசாரணைக்குள் உள்ளடங்குகிறது.

சிறிலங்காவின் முன்னாள் சுகாதார அமைச்சரான மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் சிறிலங்காவின் அரசியல் இயங்குநிலையில் மாற்றம் ஏற்பட்டது. சிறிசேனவின் புதிய அரசாங்கமானது சிங்களவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் அதிக ஆர்வங்காண்பித்துள்ளது.

இதன் காரணமாக சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தனது நாட்டில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்பளிப்பதற்கு மேலும் கால அவகாசத்தை வழங்குவதென ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானித்தது. இதன்மூலம் பெப்ரவரி மாதத்திலிருந்து ஆறு மாதங்களின் பின்னர் அதாவது செப்ரெம்பர் மாதத்தில் சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான அறிக்கையை வெளியிடுவதென ஐ.நா தீர்மானித்தது.

கடந்த மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தல் பெறுபேறானது சிறிலங்காவின் சிறிசேன அரசாங்கம் தனது பொறுப்புக்கூறலை உறுதியுடன் முன்வைப்பதற்கான பிறிதொரு வாய்ப்பை வழங்கியுள்ளது. ஏனெனில் சிறிசேனவின் கட்சி நாடாளுமன்றில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

காணாமற் போனோர் தொடர்பாக சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவினால்  மேற்கொள்ளப்பட்ட விசாரணையை மேலும் நீட்டிப்பதாக சிறிசேன கடந்த வாரம் அறிவித்திருந்தார். இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து தண்டளை வழங்குவதற்காக இது தொடர்பில் வெளிநாட்டு ஆலோசகர்களை உள்ளடக்கிய தனியான அமைப்பொன்றை உருவாக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆதரவை அதிபர் சிறிசேன கொண்டுள்ளதால் புதிய விசாரணை ஆணைக்குழுவை அமைப்பதற்கான நகர்வுகளை முன்னெடுப்பார்’ என தகவலறிந்த வட்டாரம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. ஆனாலும் இந்த நகர்வுகள் இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

குற்றம் புரிந்த குற்றவாளிகள் அனைத்துலக நீதிமன்றில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என இவர்கள் விரும்புகிறார்கள்.

‘நாங்கள் எவ்வாறு தேசிய பொறிமுறையில் நம்பிக்கை வைக்க முடியும்? நாங்கள் பல பத்தாண்டுகளாக இதற்குப் பதில் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் ஒருபோதும் சிறிலங்கா அரசு திருப்தி கொள்ளத்தக்க பதிலை முன்வைக்கவில்லை’ என 1990ல் சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவரின் மனைவியான பஸ்தப்போடி ஈஸ்வரன் கேள்வியெழுப்புகிறார்.

‘நாங்கள் நம்பிக்கை கொள்ளத் தக்க பொறிமுறை ஒன்றை வலியுறுத்துகிறோம். இது எவ்விதத்திலும் நீதிக்கு மாறாக செயற்படக் கூடாது’ எனவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலத்தில் – அமந்த பெரேரா
வழிமூலம் – IRIN
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *