மேலும்

சிறிலங்காவில் இனி என்ன?

Srilanka-Electionஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகள் இனிவருங் காலங்களில் எவ்வாறு தொடரப்படும்? தமிழர் பிரச்சினைகள் தொடர்ந்தும் பின்தங்கிய நிலையில் இருக்குமா? ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ள கூட்டத் தொடரில் கொழும்பில் மூலோபாயம் என்ன?

இவ்வாறு thediplomat ஊடகத்தில் எழுதியுள்ள பத்தியில் கேள்வி எழுப்பியிருக்கிறார் Taylor Dibbert. இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளார் நித்தியபாரதி.

ஆகஸ்ட் 10 அன்று அதாவது சிறிலங்காவின் பொதுத் தேர்தல் இடம்பெறுவதற்கு ஒரு வாரத்தின் முன்னர் நான் அங்கு சென்றிருந்தேன். குறுகிய கால அனைத்துலக தேர்தல் கண்காணிப்பாளர்களை உள்ளடக்கிய எமது குழு, முதல் சில நாட்களை சிறிலங்காவின் கொழும்பில் கழித்திருந்தோம். அதன் பின்னர் நாங்கள் எமக்காக ஒதுக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்பு மையங்களுக்குப் புறப்பட்டோம்.

கொழும்பைச் சென்றடைந்த பின்னர், நான் யாழ்ப்பாணத்திலேயே எனது தேர்தல் கண்காணிப்பை மேற்கொள்ளவுள்ளேன் என்பதை அறிந்து கொண்டேன். சிறிலங்காவிலுள்ள தமிழர் மனித உரிமைகள் நிறுவனம் ஒன்றில் நான் சில ஆண்டுகள் பணிபுரிந்திருந்தேன். இதனால் எனக்கு யாழ்ப்பாணம் பரிச்சயமாகி இருந்தது. இதனால் வடக்கு நோக்கிச் செல்வதில் நான் உண்மையில் மிகவும் ஆர்வமாக இருந்தேன்.

சிறிலங்காவின் வடக்கு மாகாணத்தின் கலாசாரம், வரலாறு மற்றும் மக்களின் சிறப்புக் குணங்கள் போன்றன காரணமாக சிறிலங்கா வருவோர் இங்கு செல்வதை முன்னுரிமைப்படுத்துகின்றனர். அதாவது வடக்கிற்குச் செல்லாது சிறிலங்கா முழுமையையும் பார்வையிட்டு விட்டதை எவரும் உணரமுடியாது.

தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்னர் நான் யாழ்ப்பாணத்தை சென்றடைந்தேன். அங்கு தேர்தல் கடமைகள் தொடர்பான சந்திப்பை சில முக்கிய அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினருடனும் மேற்கொண்டிருந்தோம்.

யாழ்ப்பாணத்தின் தேர்தல் காலம் மிகவும் அமைதியாக இருந்தது. இது ஆச்சரியப்படத்தக்க ஒன்றாகும். என்னுடன் தேர்தல் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் இருந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. இத்தேர்தல் மிகவும் சுமூகமாக நிறைவு பெறும் என்கின்ற நம்பிக்கை காணப்பட்டது.

தேர்தலுக்கு முதல் நாள் இரவு என்னால் நித்திரை கொள்ள முடியவில்லை. நான் அதிகாலையில் எழவேண்டும் என்பதும் எனக்குத் தெரியும். ஏனெனில் தேர்தல் கண்காணிப்பாளராகப் பணிபுரிவது இதுவே எனக்கு முதற்தடவையாகும். நான் மிகவும் உற்சாகத்துடன் இருந்தேன். ஆனாலும் எனக்குள் சிறிது பதற்றமாகவும் இருந்தது.

காலை ஏழு மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகியது. ஆகவே நாங்கள் எமது முதலாவது வாக்களிப்பு நிலையத்திற்கு காலை 6.15 மணியளவில் சென்றோம். என்னுடன் எனது மொழிபெயர்ப்பாளரும் வாகன சாரதியும் இருந்தனர்.

நல்லூரிலுள்ள முதலாவது வாக்களிப்பு நிலையத்திற்கு நாம் சென்றபோது அங்கு பொறுப்பாக இருந்த அதிகாரி மிகவும் தெளிவாக அனைத்தையும் விளக்கினார். இதேபோன்று யாழ்ப்பாண நகரைச் சூழவிருந்த ஏனைய வாக்களிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் என்னை மிகவும் மகிழ்வடையச் செய்தன.

வாக்களிப்பு இடம்பெற்ற வேளையில் சில பிரச்சினைகளும் இடம்பெற்றதை நாங்கள் அவதானித்தோம். எடுத்துக்காட்டாக, வாக்கு நிலையங்களில் எத்தனை வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்பது தொடர்பில் காவற்துறை உறுப்பினர் ஒருவர் ஆர்வங் காட்டாததை நான் அவதானித்தேன். பிறிதொரு வாக்களிப்பு நிலையத்தில் மிகவும் அதிகமான காவற்துறை உறுப்பினர்கள் கடமையில் ஈடுபட்டிருந்ததையும் நான் பார்த்தேன்.

இதன் பின்னர், இராணுவ வீரர் ஒருவர் வாக்களிப்பு நிலையம் ஒன்றில் நிற்பதை அவதானித்தேன். இது ஒருபோதும் அனுமதியளிக்கப்படக் கூடாது. ஒருபோதும் தமது வாக்களிப்பு நிலையங்களில் கண்டிராத அனைத்துலக தேர்தல் கணிக்காளிப்பாளர்களை மக்கள் முதலில் பார்த்து வியந்தனர்.

தேர்தல் முடிவடைந்த பின்னர் நாங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1.30 மணியளவில் கொழும்பைச் சென்றடைந்தோம். இதன்பின்னர் ஆகஸ்ட் 18 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டன.

இதனைத் தொடர்ந்து சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பிரதமராகவும் பதவியேற்றுள்ளனர்.

தற்போது சிறிலங்காவில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு ஆட்சி மேற்கொள்ளப்படுகிறது.

இது தவிர நாட்டில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகள் இனிவருங் காலங்களில் எவ்வாறு தொடரப்படும்? தமிழர் பிரச்சினைகள் தொடர்ந்தும் பின்தங்கிய நிலையில் இருக்குமா? ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ள கூட்டத் தொடரில் கொழும்பில் மூலோபாயம் என்ன? இவையெல்லாம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வினாக்களாகும்.

தற்போது சூழ்நிலையின் பிரகாரம் ராஜபக்ச மிகவிரைவில் சிறிலங்காவின் அரசியலிலிருந்து ஒதுங்குவார் என எதிர்வுகூற முடியாது. சிறிலங்காவானது முன்னைய அதிபரின் காலத்தில் அதிகம் காணப்பட்ட   அதிகாரத்துவம், பாரபட்சம், ஊழல் மற்றும் நயவஞ்சக அரசியல் போன்றவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு தக்க சூழலையும் வாய்ப்பையும் கொண்டுள்ளது என நம்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *