மேலும்

இந்தியாவுக்கு வாய்ப்பாக அமையும் சிறிலங்காவின் புதிய வெளியுறவுக் கோட்பாடு

India-srilanka-Flagஇந்தியா கொண்டுள்ள கட்டுமான வளங்களின் அடிப்படையில், கொழும்பின் அனைத்துத் தேவைகளையும் இந்தியாவால் நிவர்த்தி செய்துவிட முடியாது. இந்தியாவை விட வளங்கள் அதிகம் கொண்டுள்ள நாடுகளின் முதலீடுகளையும் சிறிலங்கா உள்ளீர்த்துக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு The Diplomat ஊடகத்தில் Jhinuk Chowdhury எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

அண்மையில் சிறிலங்காவின் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட ரணில் விக்கிரமசிங்க நாட்டின் வெளியுறவுக் கோட்பாட்டை மீளவும் ஆராய வேண்டிய நிலையிலுள்ளார். ஏனெனில் சிறிலங்காவின் வெளியுறவுக் கோட்பாடானது அண்மைய ஆண்டுகளில் சீன சார்புடையதாக அமைந்துள்ளமையே ஆகும்.

ஆகவே சிறிலங்காவின் புதிய அரசாங்கம் நாட்டின் வெளியுறவுக் கோட்பாட்டை சமவலுப்படுத்த வேண்டும்.

மகிந்த ராஜபக்சவின் முன்னைய அரசாங்கத்தின் கீழ் இந்தியா மற்றும் மேற்குலகம் அதிகளவில் புறக்கணிக்கப்பட்டதுடன், சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.

சீனாவானது சிறிலங்காவில் கட்டுமானம் மற்றும் நிதி சார் முதலீடுகளை மேற்கொள்வதன் பேரில் தனது செல்வாக்கை பலப்படுத்தியது.

இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் யப்பான் போன்றவற்றை மையப்படுத்திய விரிவான வெளியுறவுக் கோட்பாட்டை விக்கிரமசிங்கவின் புதிய அரசாங்கம் மீளவும் வடிவமைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா இந்த நடவடிக்கையைத் தொடர்ந்தும் செய்தால், இந்திய மாக்கடல் பிராந்தியம் மீதான பிரதமர் நரேந்திர மோடியின் புதிய குவிமையமானது கொழும்பைத் தனது பிரதான பங்காளியாக்குவதற்கும் இதன் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கும் உதவும்.

‘சிறிலங்காவின் அரசியல் வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயமாகும். ஆகவே, நாங்கள் இந்தியாவுடன் மிகவும் நெருங்கிய உறவுகளைப் பேண வேண்டும்’ என அண்மைய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சிறிலங்காவின் பிரதமர் ரணில் தெரிவித்திருந்தார்.

இவ்வாண்டின் ஆரம்பத்தில் இந்தியப் பிரதமர் மோடி சிறிலங்காவுக்கான தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட போது, இந்திய-சிறிலங்கா சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை விரிவுபடுத்தும் நோக்கில் 5.2 பில்லியன் டொலர் பெறுமதியான இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தார்.

இதேவேளை இரு நாடுகளினதும் வர்த்தக நடவடிக்கைகளை சமப்படுத்துவதற்கான ஒரு உடன்பாடாகவும் இது காணப்படுகிறது.

சமாதான நோக்கங்களுக்குப் பயன்படுத்தக் கூடிய விதத்தில் சிவில் அணுவாயுத ஒத்துழைப்பு உடன்படிக்கையும் மோடியின் சிறிலங்கா வருகையின் போது கைச்சாத்திடப்பட்டது.

நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட எரிசக்தித் திட்டம் மற்றும் இந்தியா மற்றும் சிறிலங்காவைத் தொடர்புபடுத்தும் கடலிற்கு அடியிலான பரிமாற்று வழியொன்றை உருவாக்குதல் போன்ற சில திட்டங்களிலும் மோடி கைச்சாத்திட்டிருந்தார்.

இவ்வாறான திட்டங்கள் சிறிலங்காவில் இந்திய முதலீடுகளை மீண்டும் புதுப்பிப்பதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளதாக வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் இந்தியா சில திட்டங்களை மேற்கொள்கிறது. மியான்மாரின் சிற்வே துறைமுகத் திட்டம், ஈரானிய சபகார் துறைமுகத் திட்டம் போன்று இந்திய மாக்கடலில் சிறிலங்காவின் அமைவிடம் மிகவும் முக்கியமானதாகும்.

இதுவரையில், சிறிலங்காவின் போரால் பாதிக்கப்பட்ட தமிழர் பிரதேசமான வடக்கில் மீள்கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதிலேயே இந்தியா தனது கவனத்தைக் குவித்துள்ளது. இதேபோன்று சிறிலங்காவின் கடல்சார் அபிவிருத்திக்கும் இந்தியா முதலீட்டை மேற்கொள்ளும்.

தென்னாசியாவின் அதிகளவான நடவடிக்கைகள் இடம்பெறும் துறைமுகங்களாக கொழும்பு மற்றும் மும்பை காணப்படுவதாகவும் இவை சிங்கப்பூருடன் போட்டியிடத்தக்க பிராந்திய மையங்களாக வளர்ச்சியடையும் எனவும் வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், இந்தியா கொண்டுள்ள கட்டுமான வளங்களின் அடிப்படையில், கொழும்பின் அனைத்துத் தேவைகளையும் இந்தியாவால் நிவர்த்தி செய்துவிட முடியாது என்பதும் இங்கும் சுட்டிக்காட்டத்தக்கதே.

இந்தியாவை விட வளங்கள் அதிகம் கொண்டுள்ள நாடுகளின் முதலீடுகளையும் சிறிலங்கா உள்ளீர்த்துக் கொள்ளவேண்டும்.

அமெரிக்கா, யப்பான் மற்றும் அவுஸ்திரேலியா போன்றவற்றின் உதவிகளை சிறிலங்கா பெற்றுக் கொள்ள முடியும். இந்த மூன்று நாடுகளும் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் தமது செல்வாக்கை நிலைப்படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வங் காண்பிக்கின்றன.

மைத்திரிபால சிறிசேன சிறிலங்காவின் அதிபராகப் பதவியேற்ற கையோடு, அமெரிக்காவின் இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சிறிலங்காவுக்கான தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். 2005இன் பின்னர் அமெரிக்காவின் இராஜாங்கச் செயலர் ஒருவர் சிறிலங்காவுக்கு வருகை தந்தமை இதுவே முதற்தடவையாகும்.

ஜோன் கெரி சிறிலங்காவுக்கான தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டமையானது மேற்குலக நாடுகள் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்துவதில் எவ்வளவு தூரம் ஆர்வங்கொண்டுள்ளன என்பதையே சுட்டிநிற்கின்றன.

கெரியின் வருகைக்கு முன்னர்,, சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் அமெரிக்காவின் ‘கார்ல் வின்சன்’ கப்பலில் பயணம் செய்தமையானது அமெரிக்கா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் உறவை வெளிப்படுத்தி நிற்கிறது.

இவ்விரு நாடுகளும் தமது கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான நகர்வை முன்னெடுத்துள்ளனர்.

ஆசிய கட்டுமானச் சந்தையில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன் ஆசியாவின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு 110 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதாக யப்பான் அறிவித்தது. இந்த அறிவிப்பானது யப்பான் ஆசிய நாடுகளில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான ஒரு நகர்வாக நோக்கப்படுகிறது.

இந்த நிதியானது ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக நாடுகளுக்கு ஒதுக்கப்படவுள்ளது. இதில் ஒரு பங்கைப் பெற்றுக் கொள்வதில் சிறிலங்காவும் ஆர்வமாக இருக்கும் என்பது நிச்சயமாகும்.

புகலிடக் கோரிக்கையாளர்களின் படகுப் பயண விவகாரத்தை முதன்மைப்படுத்தி அவுஸ்திரேலியாவுடனான உறவை மீளக் கட்டியெழுப்பவுள்ளதாக விக்கிரமசிங்க அண்மையில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவின் வெளியுறவுக் கோட்பாட்டில் வரையப்படவுள்ள புதிய அத்தியாயமானது இந்திய மாக்கடல் பிராந்தியத்தை நோக்கிய செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு துணைபுரியும்.

உலக அதிகாரம் மிக்க நாடுகளுடனான சிறிலங்காவின் நல்லுறவானது இந்திய மாக்கடலில் இந்தியா தனது அவாக்களைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான பல்தரப்பு தலைமைத்துவ நகர்வுகளுக்கு துணைபோகும் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *