மேலும்

மகிந்தவின் தவறான கணிப்புகள் – ‘தி எக்கொனமிஸ்ட்’

Mahinda-Rajapaksa-சிறிலங்காவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் உச்சக்கட்டமாக நடைபேசியில் எடுக்கப்பட்ட காணொலி ஒன்று பரவவிடப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்சவிற்கு தனது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோல்வியடையும் என்பது ஏற்கனவே தெரியும் என்பதை விபரிப்பது போன்ற குறுகிய காணொலி அது.

சிறிலங்காவின் ஆட்சியைக் கைப்பற்றி நாட்டின் அடுத்த பிரதமராகத் தான் தெரிவு செய்யப்படுவேன் என்ற நம்பிக்கையுடன் மகிந்த ராஜபக்ச தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட போதிலும் ஆகஸ்ட் 17ல் இடம்பெற்ற தேர்தலில் இவரது நம்பிக்கை தவிடுபொடியாகியுள்ளது.

இவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  ஆனால் இவரது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 225 மொத்த ஆசனங்களில் 95 ஆசனங்களைப் பெற்றுள்ளது. 2010ல் இந்த முன்னணி 144 ஆசனங்களைப் பெற்றிருந்தது.

அதாவது சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டு அடுத்த ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலேயே மகிந்த ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 144 ஆசனங்களைப் பெற்று அரசாங்கத்தை அமைத்திருந்தது.

தற்போது நடந்து முடிந்த தேர்தலானது ராஜபக்ச சந்தித்த இரண்டாவது மிகப் பாரிய தோல்வியாகும். ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்ச தோல்வியடைந்ததானது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. தற்போது மகிந்த ராஜபக்சவும் இவரது கூட்டாளிகள் சிலருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போது சிறிலங்காவில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் ‘நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி’ என அழைக்கப்படுகிறது. இது 106 ஆசனங்களை வென்றுள்ளது. இதற்கு சில சிறிய கட்சிகளும் தமது ஆதரவை வழங்கியுள்ளன.

இந்த முன்னணியின் தேர்தல் விளக்கவுரைகள், தகவல் உரிமை மற்றும் சில சீர்திருத்தங்களை முன்னுரிமைப்படுத்தி சிறிய கட்சிகள் தமது ஆதரவை வழங்கியுள்ளன. நாடாளுமன்றில் மிகப் பெரிய கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைத் தலைமை தாங்கும் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பிரதமராகப் பதவியேற்றுள்ளார். இவர் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து அதாவது சிறிலங்காவின் புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்ட பின்னர் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்துள்ளார்.

இந்தக் கூட்டணி அரசாங்கம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்தும் நிலைத்திருக்கும். தற்போது சிறிலங்காவின் அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாயினும் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியிலிருக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சி வலது சாரிக் கட்சியாகும். இதேவேளையில் சிறிசேனவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தன்னைத் தானே சமவுடமைக் கட்சி எனக் கூறுகிறது. சிறிலங்காவின் புதிய சட்டசபையில் இவ்விரு கட்சிகளும் பங்கெடுப்பதுடன், சிறிய கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் சூழல் விடயங்களில் சிறிசேனவுடன் இணைந்து பிரதமர் முடிவெடுப்பதுடன், இவர் பொருளாதாரக் கோட்பாட்டை வரையறுப்பார். தேர்தலுக்கு முன்னர் ஏழு மாதங்களாக ரணில் விக்கிரமசிங்கவும் மைத்திரிபால சிறிசேனவும் மிகவும் ஒத்துழைப்புடன் பணியாற்றியிருந்தனர். இவர்கள் இருவருக்கும் ராஜபக்ச பொது எதிரியாவார்.

நாடாளுமன்றில் சேவையாற்றும் காலத்தில் நாட்டையும் ஜனநாயக முறைமையையும் பாதுகாப்பேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ராஜபக்சவும் அவரது விசுவாசிகளும் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளை குழப்ப முயல்வார்கள். இதனால் தேசிய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இடர்கள் ஏற்படும்.

ஏனெனில் அரசியல் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தற்போது ஆட்சியிலுள்ள கட்சி கொண்டிருக்கவில்லை. கட்சிகளுக்கு மத்தியில் ஒற்றுமையைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்மூலம் ‘பிரிவினை அரசியல்’ முடிவிற்குக் கொண்டு வரப்படும் எனவும் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக மத மற்றும் ஏனைய அமைப்புக்கள் தமது கருத்துக்களையும் ஆதரவையும் வழங்க முன்வரவேண்டும் எனவும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் பல விடயங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பல பொது நிறுவகங்கள் அரசியல்மயப்படுத்தப்பட்டன. இவற்றை மீளவும் நடுநிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். ராஜபக்ச குடும்பத்தினராலும் அவர்களது சகபாடிகளாலும் ஆளப்படும்  பல்வேறு வலைப்பின்னல்கள் நிர்மூலமாக்கப்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் சிறுபான்மை சமூகத்தினரின் அன்றாட வாழ்வில் தலையீடு செய்யும் இராணுவத்தினர் அகற்றப்பட வேண்டும்.

சீனா சார்பான வெளியுறவுக் கோட்பாட்டை இந்தியா மற்றும் மேற்குலகம் சார்புடையதாக மாற்றியமைப்பதற்கான நகர்வுகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சிங்களப் பெரும்பான்மை சமூகத்திற்கும் சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கும் இடையில் பல பத்தாண்டுகளாகத் தொடரப்படும் இனமுரண்பாட்டைக் களைவதற்கான வாய்ப்பை புதிய அரசாங்கம் பெற்றுள்ளது. ராஜபக்சவும் முன்னாள் தமிழ்ப் புலிகள் எனக் கூறிக் கொண்டு தேர்தலில் பங்கெடுத்த குழுவும் மக்கள் மத்தியில் குழப்பங்களைத் தோற்றுவிக்க முயற்சித்துள்ளனர்.

மாகாணங்களுக்கு மேலும் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது தொடர்பில் தாம் ஒத்துழைப்பு வழங்குவோம் என 16 ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அத்துடன் ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கு ஏற்ப போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கான சுயாதீனப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன. நாட்டின் சட்ட வரையறைகளுக்கு ஏற்ப விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஆளும் கட்சி அறிவித்துள்ளது.

பொருளாதாரத்தைப் பொறுத்தளவில், வாக்காளர்கள் பொருட்களின் விலை குறையவேண்டும் என விரும்புகிறார்கள். மேலதிக சந்தைப்படுத்தல்கள், அரச தலையீடுகளைக் குறைத்தல் போன்றன தொடர்பில் ஏற்கனவே புதிய அரசாங்கம் வாக்குறுதி வழங்கியுள்ளது.

எதிர்க்கட்சியின் பொருளாதாரக் கோட்பாடு நிச்சயமற்ற நிலையிலுள்ளது. ஏனெனில் உத்தியோகபூர்வமாக எக்கட்சி எதிர்க்கட்சியாக இருக்கும் என்பது தெளிவாகவில்லை. உண்மையான எதிர்க்கட்சி ஒரு மாக்சியக் கட்சியாகும். இது ஆறு ஆசனங்களை மட்டுமே கொண்டுள்ளது. இந்த விடயத்தில் ராஜபக்ச முடிவெடுக்காவிட்டால் மாக்சியக் கட்சியே உண்மையான எதிர்க்கட்சியாகச் செயற்படும்.

வழிமூலம் –  The Economist
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *