மேலும்

தெருமுனைக்கு வந்துள்ள சிறிலங்காவின் போர்க் கதாநாயகன்

Mahinda-Rajapaksaவரும் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதியில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையானது சிறிலங்கா எதிர்கொள்ள வேண்டிய மிகப்பாரிய சோதனையாகும்.

இவ்வாறு சிஎன்என் ஊடகத்தில் அக்ரவால் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

கடந்த பத்தாண்டில் சிறிலங்காவின் மிகப் பலம் பொருந்திய சக்தி மிக்க அரசியல்வாதி மீண்டும் ஒரு தடவை நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள போதிலும், இவரது சிறிலங்கா சுதந்திரக் கட்சி மொத்த ஆசனங்களில் 42 சதவீதத்தை மட்டுமே தக்கவைத்துள்ளது. இதனால் மகிந்த ராஜபக்ச, விளாடிமீர் புற்றினின் பாணியில், சிறிலங்காவின் பிரதமராக வருவதற்கான வாய்ப்பை இழந்துள்ளார்.

இது சிறிலங்காவின் அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. ராஜபக்சவின் ஆதரவாளர்கள் இவர் மீண்டும் சிறிலங்காவின் பிரதமராக வெற்றி பெறுவார் என அதீத நம்பிக்கை கொண்டிருந்தனர்.  ஏனெனில் நீண்ட காலமாக சிறிலங்காவின் போர்க் கதாநாயகனாக ராஜபக்ச போற்றப்பட்டார்.

தமிழ்ப் புலிகளுக்கு எதிராக பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு  யுத்தத்தை வெற்றி கொண்டவர் என்ற வகையில் சிங்களப் பெரும்பான்மை சமூகத்தவரால் ராஜபக்ச புகழப்பட்டார்.

இவரது ஆட்சிக்காலத்தில் இவரது சகோதரர்களில் ஒருவர் பாதுகாப்புச் செயலராகவும் பிறிதொரு சகோதரன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் செயற்பட்டனர்.

ராஜபக்ச குடும்பம் சிறிலங்காவின் அரசியல், வர்த்தகம் மற்றும் ஊடகம் போன்ற அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டிருந்ததாக இலங்கையர்கள்  பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்ச அதிர்ச்சித் தோல்வியடைந்தார். அதாவது இவரது அமைச்சரவையில் சுகாதார அமைச்சராகப் பணியாற்றிய மைத்திரிபால சிறிசேனவிடமே ராஜபக்ச தேர்தலில் தோற்றிருந்தார்.

சிறிலங்காவில், ஒருவர் ஐந்து ஆண்டுகள் அதிபராகப் பதவி வகிக்க முடியும். சிறிலங்காவின் அதிபர் அந்நாட்டின் மிகவும் அதிகாரம் மிக்க தலைவராவார். ராஜபக்சவால் அரசியல் யாப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதை அடுத்து இந்த அதிபர் பதவியானது மேலும் அதிகாரங்களைத் தன்னகத்தே பெற்றுக்கொண்டது.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற மகிந்த ராஜபக்ச, தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நாட்டின் பிரதமராகலாம் எனக் கனவு கண்டார்.

சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன தான் ராஜபக்சவுக்கு ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டேன் என வெளிப்படையாகத் தெரிவித்த போதிலும் கூட ராஜபக்ச இத்தேர்தலில் போட்டியிட்டார்.

இதேவேளையில், ராஜபக்சவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட 1.4 பில்லியன் டொலர் பெறுமதியான ஆடம்பரத் துறைமுகம் மற்றும் அதனுடன் இணைந்த நகரத் திட்டத்தில் ராஜபக்ச ஊழல் மோசடியில் ஈடுபட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

ராஜபக்ச பதவியிலிருந்து விலகிய பின்னர் இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது. அதாவது இது தொடர்பான பல்வேறு குற்றங்கள் விசாரணை செய்யப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதற்காகவே இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டது.

முன்னைய அரசாங்கத்தால் கைச்சாத்திடப்பட்ட அனைத்து உடன்படிக்கைகளையும் விசாரணை செய்யுமாறு அதிபர் சிறிசேன கட்டளையிட்டார். இவ்வாண்டின் ஆரம்பத்தில் ராஜபக்சவின் சகோதரர்களில் இருவரான முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலர் ஆகியோருக்கு எதிராக ஊழல் மற்றும் மோசடி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அரசியல் நோக்கம் கருதி ராஜபக்ச மறுத்துள்ளார். இவ்வாரம் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமராக வருவதற்கான ஆணை பிறப்பிக்கப்படவில்லை. இந்த ஆணையானது ராஜபக்சவுக்கு எதிராக மக்களால் முன்வைக்கப்பட்டுள்ள இரண்டாவது எதிர்ப்பு நடவடிக்கையாகும்.

‘சிறந்த ஆட்சிக்காக மக்கள் மீளவும் தமது ஆணையை உறுதியுடன் வழங்கியுள்ளனர். ராஜபக்சவுக்கு சிலர் ஆதரவளிக்கின்றனர் என்பது உண்மையே. இவர் முற்றிலும் அரசியலிலிருந்து ஒதுக்கப்படவில்லை. ஆனாலும் இரண்டாவது தடவையாக பெருமளவான மக்கள் ராஜபக்சவைத் தாம் எதிர்ப்பதை வெளிப்படுத்தியுள்ளனர்’ என மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் நிறைவேற்று இயக்குனர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச தனது குடும்பத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு மூலோபாயத் திட்டத்தை தன்னகத்தே கொண்டிருக்கலாம் என நீண்ட கால அரசியல் அவதானியும் சண்டே ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியருமான மனிக் டி சில்வா தெரிவித்துள்ளார்.

‘தனக்கும் தனது குடும்பத்தவர்களுக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதே ராஜபக்சவின் பிரதான நோக்காக இருக்கும்’ என சில்வா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்ச சிறிலங்காவின் தேசிய அரசாங்கத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுவதற்கான ஆபத்துக்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் இரண்டு தடவைகள் மக்களின் ஆணையைப் பெறாத ராஜபக்ச சிறிலங்காவின் அரசியலில் அமைதிப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சரவணமுத்து குறிப்பிடுகிறார்.

வரும் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதியில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையானது சிறிலங்கா எதிர்கொள்ள வேண்டிய மிகப்பாரிய சோதனையாகும். இந்த யுத்தத்தின் இறுதியில் 40,000 தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பான விசாரணையின் பெறுபேறுகள் எதுவாக இருப்பினும், ராஜபக்சவின் பத்தாண்டு கால ஆட்சிக்காலத்தின் பாதிப்பை இலங்கைத் தீவு மீண்டும் ஒரு தடவை நினைவுகூருவதற்கான ஒரு களமாக இது காணப்படும்.

ராஜபக்ச நீண்ட காலம் ஆட்சியிலிருக்கா விட்டாலும் கூட, இவரது ஆட்சியில் நல்லது மற்றும் கெட்டது நடந்திருந்தாலும் கூட, சிறிலங்கா தொடர்பான இறுதி முடிவை அனைத்துலக சமூகம் எட்டுவதற்கான ஒரு களமாக இது தொடர்ந்தும் காணப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *