மேலும்

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியாக பெயரை மாற்றியது ஜாதிக ஹெல உறுமய

jathika-hela-urumayaசம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய கட்சி, தனது பெயரை, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என மாற்றிக் கொண்டுள்ளது. சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜாதிக ஹெல உறுமயவின் சின்னம், சங்கு ஆக இருந்தாலும், நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்கு புதிய சின்னமாக வைரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, விமல் கீகனகே தலைமையிலான சிறிலங்கா ஜாதிக பெரமுனவுக்கு புதிதாக மலர் மொட்டு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கலாநிதி ஏ.சி.விக்னேஸ்வரன் தலைமையிலான, அகில இலங்கை திராவிட மகாசபை கட்சியின் சின்னமும் மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கட்சிக்கு கப்பல் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய மக்கள் கட்சியும் புதிய சின்னமாக கைத்தொலைபேசி சின்னத்தைப் பெற்றுள்ளது.

சிறிலங்காவின் தேர்தல் சட்டத்தின்படி, தேர்தல் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்ட பின்னரே, புதிய கட்சிகள் பதிவு, சின்னங்கள், பெயர்கள் மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம்.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, கட்சிகள் தமது பெயர்கள், சின்னங்களை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் புதிய கட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *