உலகளாவிய வர்த்தகத்திற்கான நுழைவாயிலாக இடம்பிடித்துள்ள கொழும்பு
கொழும்புத் துறைமுகம், அமெரிக்க வணிகங்களை தெற்காசியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள சந்தைகளுடன் இணைத்து, உலகளாவிய வர்த்தகத்திற்கான ஒரு முக்கிய நுழைவாயிலாக இடம்பிடித்துள்ளது என அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் தெரிவித்துள்ளார்.
நம்பகமான, பாதுகாப்பான அமெரிக்கத் தொழில்நுட்பம் எவ்வாறு கடல்சார் வர்த்தகத்தை மாற்றியமைக்க முடியும் என்பதை விளக்கும் வகையில், அமெரிக்கத் தூதரகம் நடத்திய பிராந்தியப் பயிலரங்கில், சிறிலங்கா, பங்களாதேஷ், இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த துறைமுகப் பங்குதாரர்களிடையே செவ்வாய்க்கிழமை உரையாற்றிய போதே, சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் இதனைக் குறிப்பிட்டார்.
“அமெரிக்கப் புத்தாக்கம் அந்தக் கதையின் அடுத்த அத்தியாயத்தை எழுத உதவும். துறைமுகங்கள் திறமையாகச் செயற்படும்போது, கப்பல்கள் காத்திருக்கும் நேரம் குறைகிறது, வணிகங்கள் பொருட்களைக் கொண்டு செல்லச் செலவிடும் பணம் குறைகிறது, மேலும் நம்பகமான வர்த்தகத்தால் குடும்பங்கள் பயனடைகின்றன.
இந்த மாற்றத்தின் முன்னணியில் அமெரிக்க நிறுவனங்கள் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்; அவை உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தையும் நிபுணத்துவத்தையும் கொண்டுவந்து, எமது பொருளாதாரங்கள் சார்ந்திருக்கும் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தி, இந்தியப் பெருங்கடல் முழுவதும் உள்ள அமெரிக்க வணிகங்களுக்குப் புதிய கதவுகளைத் திறக்க வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிராந்திய துறைமுக முடிவெடுப்பவர்களையும் 11 அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் இந்தப் பயிலரங்கம், துறைமுகச் செயற்பாடுகளை நெறிப்படுத்தவும், சரக்குகளை விரைவாகக் கொண்டு செல்லவும், கப்பல் போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்கவும், விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும் உதவும் அமெரிக்கப் புத்தாக்கங்களை முன்னிலைப்படுத்துகிறது.
அதே நேரத்தில், இந்தியப் பெருங்கடல் முழுவதும் உள்ள அமெரிக்க வணிகங்களுக்குப் புதிய வர்த்தக வாய்ப்புகளையும் இது திறக்கிறது.
கொழும்புத் துறைமுகத்தை நவீனமயமாக்குவதற்காக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்த 17 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தை அடிப்படையாகக் கொண்டு, ‘கடல்சார் ஒற்றைச் சாளரங்கள் மற்றும் துறைமுக சமூக அமைப்புகளை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பிலான இரண்டரை நாள் பயிலரங்கம், நவீன துறைமுகங்களின் செயற்பாட்டிற்குத் தேவையான டிஜிட்டல் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தியது.
இந்த அமெரிக்க மானியம், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இரண்டு அமைப்புகளின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும்.
ஒன்று, கடல்சார் ஒற்றைச் சாளரம் , இது கப்பல்கள் தங்கள் வருகை, புறப்பாடு மற்றும் ஒழுங்குமுறைத் தகவல்களை ஒரே டிஜிட்டல் தளம் மூலம் சமர்ப்பிக்க அனுமதிக்கிறது.
மற்றொன்று, துறைமுக சமூக அமைப்பு, இது கப்பல் நிறுவனங்கள், துறைமுக இயக்குநர்கள், சுங்கம், குடிவரவு மற்றும் வணிகங்களை இணைத்து, சரக்கு மற்றும் தளவாடத் தகவல்களை நிகழ்நேரத்தில் பரிமாறிக்கொள்ள உதவுகிறது.
ஒன்றிணைந்து, இந்த அமைப்புகள் சிதறிக் கிடக்கும் காகித வேலைகளையும் செயல்முறைகளையும் ஒரு திறமையான, இணைக்கப்பட்ட வலையமைப்பாக மாற்றி, சரக்குகளுக்கு முன்பாகத் தகவல்கள் சென்றடையவும், ஒப்புதல்களை விரைவுபடுத்தவும், செலவுமிக்க தாமதங்களைக் குறைக்கவும் உதவும்.
இந்த பயிலரங்கில் பங்கேற்கும் பதினொரு அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களும், அமெரிக்க வர்த்தகத் திணைக்களம், அமெரிக்கக் கடலோரக் காவல்படை மற்றும் பிற அமெரிக்க அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்களும் பங்கேற்றனர்.
