மேலும்

தேர்தலில் குதிக்க பிஜேபி ஆக உருமாறுகிறது பொது பல சேனா

bbsசிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில், பொது பலசேனா அமைப்பு, பொது ஜன பெரமுன ( பிஜேபி) என்ற பெயரில் போட்டியிடவுள்ளதாக, அந்த அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்பாக பொது பலசேனா, கடந்த ஆட்சிக்காலத்தில், சிறுபான்மை மதங்கள், மற்றும் இனங்களுக்கெதிரான தாக்குதல்கள், பரப்புரைகள், போராட்டங்களினால் பிரபலம் பெற்றிருந்தது.

கோத்தாபய ராஜபக்சவுக்கு மிக நெருக்கமாக செயற்பட்ட பொது பலசேனாவின் செயற்பாடுகளால், மகிந்த ராஜபக்ச ஆட்சி மீது முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் கடும் வெறுப்படைந்தனர்.

கடந்த அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர், தனது தோல்விக்கு பொது பல சேனாவும் ஒரு காரணம் என்றும் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தநிலையில், தற்போது தனியான அரசியல் கட்சியாக நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக பொது பல சேனா அறிவித்துள்ளது.

பொது ஜன பெரமுன (பிஜேபி) என்ற பெயரில் அரசியல் கட்சியை அமைத்து போட்டியிடவுள்ளது இந்த அமைப்பு.

பொருத்தமான வேட்பாளர்களிடம் இருந்து ஏற்கனவே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், விரைவில் தேர்தல் பரப்புரைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், டிலந்த விதானகே குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஒன்றும் ஆச்சரியமான வெற்றியை எதிர்பார்க்கவில்லை என்றும் நியாயமான பிரதிநிதித்துவத்தை அடைவதற்காக போராடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, பொது பலசேனாவைச் சேர்ந்த பிக்குகளை போட்டியில் நிறுத்தப் போவதில்லை என்றும்,  தகுதிவாய்ந்தவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தவுள்ளதாகவும், பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *